தஞ்சாவூர், மார்ச் 11- ஜி.வி.கே, ஈ.எம்.ஆர்.ஐ நிறுவனம் சார்பாக 108 ஆம்புலன்சில் பணிபுரிய மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு மார்ச் 14 ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திலும், மார்ச் 15 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திலும், மார்ச் 17, 18 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம். இம்முறை மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் என இரண்டு பணிகளுக்கும் ஒருவரே நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு பிஎஸ்சி வேதியியல், இயற்பியல், உயிரியல், உயிரி தொழில்நுட்பவியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல் மற்றும் பிஎஸ்சி நர்சிங் அல்லது லேப் டெக்னீசியன் அல்லது பி.பார்ம் அல்லது அரசு மருத்துவக் கல்லூரியில் 2 ஆண்டுகள் சான்றிதழ் படிப்பு படித்த (ப்ளஸ் டூ முடித்து இரண்டு ஆண்டுகள்) ஆண், பெண் பங்கேற்கலாம். நேர்முகத் தேர்வு அன்று 22 வயதுக்கு மேலும், 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாத ஊதியம் ரூ.14,966 வழங்கப்படும். உயரம் 162.5 சென்டிமீட்டர் குறையாமல் இருக்க வேண்டும். வாகன ஓட்டுநர் உரிமம் பேட்ச் மற்றும் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
மேற்கூறிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் எடுக்க தயாராக உள்ள ஆண் விண்ணப்பதாரர்களும் நேர்முகத்தேர்வில் பங்கு பெறலாம். தேர்வு செய்யப்பட்ட நபர்கள் 12 மணி நேர ஷிப்டு முறையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இரவு-பகல் ஷிப்டு முறையில் பணியமர்த்தப்படுவர். தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வானது காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை கீழே குறிப்பிட்டுள்ள முகவரிகளில் நடைபெறும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மார்ச் 14 ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்திலும், மார்ச் 15 ஆம் தேதி சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்திலும், மார்ச் 17, 18 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள 108 அலுவலகத்திலும் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்கண்ட தகுதிகளை கொண்டவர்களாக இருப்பின், தங்களது அனைத்து அசல் சான்றுகளை மையங்களுக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள 7397701807 மற்றும் 9790847828 என்ற கைப்பேசி எண்களை காலை 9 மணி முதல் மாலை 4:30 வரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.