districts

img

அரசியல் பேசாமல் அவதூறு பேசும் அண்ணாமலை தொல்.திருமாவளவன் எம்.பி., சாடல்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசியல் பேசாமல் அவதூறு பேசி வருகிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, சாடியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிறன்று தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதில், விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கு சிறப்பு புலனாய்வுக்குழு மற்றும்  சாதி, மத மோதல்களை தடுத்திடும் வகையில் சிறப்பு சைபர் கிரைம் உளவுத்துறை அமைக்க வேண்டும், என்றார்.

மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அரசியல் பேசாமல் அவதூறு பேசி வருகிறார். தன்னுடைய பெயரை விளம்பரப்படுத்தி, அனைத்து தொலைக்காட்சிகளும் அவரைப் பற்றி பேச வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் அப்படி பேசி வருகிறார். மேலும் அவதூறு பேசி வரும் அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர், என்றார்.

பொது வேலை நிறுத்தத்தில் விசிக தொழிற்சங்க அமைப்பு

தொடர்ந்து அவர் பேசுகையில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் தற்போது ஆளுநரிடம் உள்ளது. அந்த தீர்மானத்தை விரைந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். குடியரசுத் தலைவர் அதனை கிடப்பில் போடாமல் அதற்கு ஒப்புதல் வழங்கி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும். மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் விசிக தொழிற்சங்க அமைப்பு முழுமையாகப் பங்கேற்கும் எனவும் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.