districts

img

100 நாள் வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 6 நாள் தான் வேலையா? : விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆவேசம்!

சேலம், ஜூலை 4- 100 நாள் வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 6 நாள் மட்டும் வேலை வழங்குவதை கண்டித்து பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வருடத்திற்கு 100 நாட்கள் வேலைதிட்டத்தின் அடிப்படையில் ஏழைஎளிய உழைப்பாளி மக்கள் பயன்படுகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஆண்டிற்கு 6 நாட்கள் மட்டும் வேலை வழங்கும் அவலம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் விவசாயிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கப்படுவதில்லை. அப்படி வழங்கினாலும், வெறும் 6 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் மு.ஜோதிபாசு தலைமையில் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலைத்திட்டத்தில் தினக்கூலியாக ரூ.381 வழங்க வேண்டும். மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் தவறான அணுகுமுறையால் கிராமங்களில் வேலையின்மை விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது. இதை கருத்தில் கொண்டு வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். பணியாளர்கள் காலை 7:00 மணிக்கு வேலைத்தளத்திற்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும். வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். 60 வயது பூர்த்தி அடைந்தவருக்கு வேலை மறுக்காமல் வழங்க வேண்டும். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டன.
முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.கணபதி, ஒன்றிய செயலாளர் பி.சாமியப்பன், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.சுரேஷ், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தனசுதா, பொருளாளர் மேகலா, மாவட்ட நிர்வாகி கோகிலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;