districts

உயரக் கொளல் வேண்டும்!

      
        (கோவி.பால.முருகு)

வீரம் மிகவேண்டும்-அதில்
விவேகம் கொளவேண்டும்

வாய்மை மிகவேண்டும்-அதை
வாழ்வில் கொளவேண்டும்

அன்பு மிகவேண்டும்-அதை
ஆற்றிடும் செயல்வேண்டும்

அறிவு மிகவேண்டும்-அதால்
ஆகும் செயல்வேண்டும்

ஊக்கம் மிகவேண்டும்-அதை
உள்ளம் கொளவேண்டும்

இன்சொல் மிகவேண்டும்-அதை
இயம்பிடும்  செயல்வேண்டும்

அடக்கம் மிகவேண்டும்-அதை
அவையினில் கொளவேண்டும்

பொறுத்தல் மிகவேண்டும்-அதைப்
போற்றிடும் செயல்வேண்டும்

ஒழுக்கம் மிகவேண்டும்-அதை
ஒன்றியே  வாழவேண்டும்

அருளே மிகவேண்டும்-அதை
அள்ளித் தரவேண்டும்

உடைமை  இதுவெனவே-வாழ்வில்
உயரக் கொளல்வேண்டும்