சிதம்பரம், ஜூலை 27- காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணி துறையினர் கடந்த 15ஆம் தேதி காவிரி ஆற்றில் உபரி நீரை திறந்து விட்டனர். இதனையொட்டி கல்லணைக்கு வந்த உபரி நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கீழணைக்கு கடந்த 12ஆம் தேதி வினாடிக்கு 1 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையின் முழு கொள்ளளவான 9 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டு மீதமுள்ள ஒரு லட்சத்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதில் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2,100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து 5 நாட்கள் தண்ணீர் வந்ததால் வீராணம் ஏரியின் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இதில் சென்னை குடிநீருக்கு வினாடிக்கு 63 கனஅடி அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது முழு கொள்ளளவு எட்டியுள்ள நிலையில் விவசாயிகளின் ஆலோசனைக்கு பிறகு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். வீராணம் ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.