சென்னை, பிப். 22- ஓட்டேரி டோபிகானா இடிக்கப்பட்டதை யடுத்து சிபிஎம் நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 3 நாட்களில் மாற்று இடம் வழங்கப்படும் என மண்டல அதிகாரி உறுதியளித்தார். திரு.வி.க. நகர் மண்டலத்திற்கு உட்பட்ட 76ஆவது வார்டு ஓட்டேரியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை ஒட்டி, சலவை செய்யும் இடம் ‘டோபி கானா’ பகுதி உள்ளது. இங்கு 4 தலை முறைகளாக 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கி, சலவை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சலவைக் கூடத்தை சீரமைக்க முடி வெடுக்கப்பட்டு, அதற்காக அந்த இடத்தை காலி செய்யும்படி சலவைத் தொழி லாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அப்போது அவர்கள் ஒரு மாத அவகாசம் கோரினர். இந்நிலையில் வெள்ளியன்று ஜேசிபி இயந்திரங்களுடன் சென்ற மாநகராட்சி அதிகாரிகள், அவகாசம் தர முடியாது எனக்கூறி, மக்களை வெளியேற்றி, சலவைக் கூடத்தை இடித்து அகற்றினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பொருட்களுடன் சென்று, ஓட்டேரியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரியும், சலவைக் கூட பணி களை விரைந்து முடிக்கவும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து சலவைத் தொழிலாளர்கள் கூறுகையில், பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருகிறோம். இந்த விட்டால் எங்களுக்கு வேறு எதுவும் தெரி யாது. எங்களுக்கு ஆங்கிலத்தில் நோட்டீஸ் கொடுத்தனர். அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று தெரியாததால் நாங்கள் வாங்கவில்லை. அதிகாரிகள் அவ காசம் தராமல் திடீரென வந்து இடித்து விட்டனர். சொந்த ஊரிலேயே அகதிகளாக நிற்கிறோம் என்று அவர்கள் கண்ணீர் மல்கக் கூறினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கார்த்தீஷ் குமார், பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுடன், மண்டல அதிகாரி முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, 3 நாட்களுக்குள் மாற்று இடம் வழங்கப்படும் என்றும், அங்குள்ள பொருட்களை எடுக்க வசதியாக, மின்சார வசதி செய்து தரப்படும் என்றும், சலவைக் கூடம் சீரமைக்கப்பட்டதும் அவர்களுக்கு மீண்டும் இடம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையில் சிபிஎம் நிர்வாகிகள் கே.சுரேஷ்குமார், பி.மனோ கரன், வேம்புலி, அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.