districts

img

தொழில் நகரை சீரழிக்கும் ஒன்றிய பாஜக அரசு! திருக்கோவிலூரில் போராடும் சிபிஎம்

ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டத்தின் 2ஆவது தலைநகராக இருந்தது திருக்கோவிலூர். இந்த பகுதி தொழில் நகரமாக கட்டமைக்கப்பட்டது. நாட்டின் அனைத்து தலைநகருக்கும் செல்லக்கூடிய ரயில்கள் திருக்கோவிலூர் வழியாக சென்றது.  தற்போதைய விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கண்டாச்சிபுரம், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, திருவெண்ணைநல்லூர் ஆகிய 5 தாலுகாக்களைச் சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ மற்றும் கல்வி சேவைகள் பெறவும், வணிகர்கள் வியாபார நிமித்தமாகவும் உழைப்பாளி மக்கள் வேலைக்காகவும் பெங்களூர், தில்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட மாநகரங்களுக்கும் திருப்பதி, மேல்மருத்தூர் சென்று வருவதற்கும் திருக்கோவிலூர் ரயில் நிலையம் பெரும் உதவியாக இருந்தது. வேளாண் விளை பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி என பெரும் வணிகம் நடைபெற்றது.  பிறகு, அகலப்பாதை பணிக்காக அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. அந்தப் பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு 10 ஆண்டுகளை கடந்துவிட்டது. ஆனாலும், நிறுத்தப்பட்ட ரயில்சேவை மட்டும் இன்று வரைக்கும் தொடங்கவில்லை. நிறுத்தப்பட்ட ரயில் சேவையை தொடங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மாவட்டக்குழு சார்பில் பல முறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுவும் கொடுக்கப்பட்டது. ஆனாலும், அதிகாரிகளும் ஒன்றிய அரசும் ரயில்வே நிர்வாகமும் கண்டுக்கொள்ளவில்லை. இந்த நிலையில், அரகண்டநல்லூர் நகரக் சிபிஎம் கிளை சார்பில் ஜனவரி 7 முதல் 31 வரை நடைபயணம் நடைபெற்றது. அப்போது கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. மேலும், மக்கள் சந்திப்பு இயக்கமும் நடத்தப்பட்டது. குறிப்பாக பாமனி விரைவு ரயில், மன்னார்குடி-திருப்பதி விரைவு ரயில், திருப்பதி-ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் திருக்கோவிலூர் ரயில் நிறுத்தத்தில் நின்று சென்றால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும், உலகம் முழுவதும் இருந்து வந்து வரும் ஆன்மீக பக்தர்களும் பெரும் பயன் பெறுவர். அதேபோல், திருக்கோவிலூர் மார்க்கத்தில் இருந்து தினசரி திருவண்ணாமலை-தாம்பரம் வரையில் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும். விழுப்புரத்திலிருந்து அதிகாலை 5.20 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க வேண்டும். மருத்துவ தேவைக்காக 70 கி.மீ. தொலைவிலுள்ள புதுச்சேரிக்கு பல பேருந்துகள் மாறி செல்ல வேண்டியுள்ளதால் காலை 8 மணி பாசஞ்சர் ரயிலை புதுச்சேரி வரை நீட்டிக்க வேண்டும். இத்திட்டங்களை செயல்படுத்தினால் ரயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் செலவும் கிடையாது. வருமானம்தான் கூடுதலாக கிடைக்கும். ரயில்வே வளாகத்திற்குள் பேருந்து நிறுத்தம், நிழற்குடை அமைத்தும் சாலையை புனரமைப்பு செய்தும் மேம்பாலம் கட்டிக்கொடுத்தால் மேலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.
மீண்டும் போராட்டம்
தேவனூர் வருவாய் கிராம பகுதியை அரகண்டநல்லூர் வருவாய் கிராமத்தோடு இணைக்க வேண்டும், சொந்த வீடில்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச குடிமனை வழங்க வேண்டும், சாலை, கழிவுநீர் கால்வாய், மின் விளக்கு, சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் சமதளம் வரை மேம்பாலம் அமைத்து தடையில்லாமல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 10, 11, 12 வார்டுகளை சூழ்ந்துள்ள கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும். கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தரப்பினரிடமும் கையெழுத்து பெறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர், உயர் கல்வித் துறை அமைச்சர், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் கடந்த 31ஆம் தேதி கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் கற்பகம் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, திருக்கோவிலூர் மார்க்கத்தில் திருவண்ணாமலை முதல் தாம்பரம் பயணிகள் ரயில் இயக்குவது, விரைவு ரயில்கள் நிறுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பது என்று எடுக்கப்பட்ட முடிவும் அமலக்கு வரவில்லை. இதனால் மீண்டும் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனையடுத்து, பிப். 22 அன்று கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது கட்டமாக அமைதி பேச்சு நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் அன்றை தினமே ரயில் மறியல் போராட்டம் செய்வது என்று முடிவு செய்துள்ளதாக போராட்டக்குழு அமைப்பாளர் ஏ.ஆர்.கே.தமிழ்ச் செல்வன், பொன் ராமகிருஷ்ணன், பி,குமார், எஸ்,கணபதி, ஒருங்கிணைப்பாளர், என்.எஸ்.ராஜா, ஏ.வி.கண்ணன், எம்.பழனி. ஏ.பொன்முடி, குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் இரா.துரை, பி.முத்துலிங்கம் ஆகியோர் தெரிவித்தனர்.

;