ஓசூர் மாநகராட்சி மையப் பகுதியில் உள்ள பெரியார் நகர் பிரதான சாலையில் இருந்து பிரிந்து செல்லும் மூன்றடி அகல சந்தில், இரு சந்துகள் தாண்டி 125 அடி தூரத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் கடுமை யான இட நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பத்தடி குறுக்கு பத்தடி நீள அளவுள்ள பழைய சிமெண்ட் ஷீட் கூரை யுடன் கூடிய சிறிய வீட்டில் இம்மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு உதவியாளர் பணிபுரிந்து வருகின்றனர். முப்பது குழந்தைகள் தினசரி வருகை தந்து கல்வி பயில்கின்றனர். மிகச்சிறிய இந்த அறைக்குள் சிறிய சமையலறை மற்றும் ஒரு கழிப்பறையும் அமைந்துள்ளன. மீதமுள்ள இடத்தில் தையல் இயந்திரம், நாற்காலிகள், சத்துணவு மாவு மூட்டைகள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்கள் ஆகிய அனைத்தும் வைக்கப்பட்டுள்ளன. மிஞ்சிய மிகச்சிறிய இடத்தில்தான் முப்பது குழந்தைகள் அமர்ந்து படிப்பதும், உணவு உண்பதும், படுத்து ஓய்வு எடுப்பதும் நடைபெற்று வருகிறது. மையத்திற்கு வருவதற்கு மூன்றடி அளவிலான மூன்று சந்துகளை திரும்பி 150 அடி தூரத்தை கடந்துதான் அடைய முடிகிறது.
இந்த மையம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒன்னல்வாடியில் இருந்து தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது முதல் இன்று வரை இட நெருக்கடியின் அவலத்திலேயே குழந்தைகளும் இருந்து வருகின்றனர். இது குறித்து பெற்றோர்களும் பணியாளர்களும் பலமுறை அரசு அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மழை பெய்யும் போது சந்தில் விழும் மழைநீர் மையத்திற்குள் வந்துவிடுகிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிமெண்ட் ஷீட் கூரை அமைத்த வீடு என்பதால் மழை நீர் சிமெண்ட் ஷீட்டுகளில் முத்து முத்தாக கோர்த்து நிற்கிறது. சுகாதார கேடுகள் குழந்தைகளும் ஊழியர்களும் ஒருவர் விடும் மூச்சுக்காற்றை சுவாசித்து மூச்சு விடும் அளவிற்கு கடும் நெருக்கடி உள்ளது. கழிப்பறையில் போதிய தண்ணீர் வருவதில்லை. சுகாதாரமற்ற மிகக் குறுகிய அறை என்பதால் பல குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், தலைவலி, சளி தொல்லைகள் ஏற்பட்டு வருகின்றன. ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வந்தாலே நிறைய குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவிவிடுவதாகவும் பல பெற்றோர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.
இட நெருக்கடி காரணமாக பல பெற்றோர்கள் அடிக்கடி குழந்தைகளை வந்து கூட்டிக் கொண்டு செல்வதும் திரும்பி வந்து விட்டுச் செல்வதுமாக இருக்கின்றனர். சந்து நெடுகிலும் தெரு நாய்கள் நிறைய படுத்து கிடப்பதால் பெற்றோர்கள் பயத்துடனேயே குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர். இந்த மையம் முன்னர் இப்பகுதியில் உள்ள ஓட்டு வீட்டில் இருந்தது. அவ்வீடு இடிந்து விழும் நிலையில் இருந்ததால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய மையத்திற்கு மாற்றப்பட்டது. வாடகை சுமை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆயிரம் ரூபாயும் ஊழியர்கள் ஐந்நூறு ரூபாயும் சேர்த்து வாடகை கொடுத்து வந்த நிலையில், தற்போது அரசின் இரண்டாயிரம் ரூபாயும் ஊழியர்கள் ஐந்நூறு ரூபாயும் சேர்த்து வாடகை கொடுத்து வருகின்றனர் என்று பெரும்பாலான பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். சிபிஎம் தலைவர்கள் ஆய்வு இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் நாகேஷ் பாபு, ஒன்றியச் செயலாளர் ஆர்.கே.தேவராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் இந்த மையத்தை பார்வையிட்டனர். அதன் அடிப்படையில் மையத்திற்கு வரும் குழந்தைகளை நாய்கள் தொல்லையில் இருந்து காப்பாற்றிடவும், சிறிய சந்தில் கடும் நெருக்கடியான, சுகாதாரம், காற்றோட்டம் இல்லாத மிகச்சிறிய அறையிலிருந்து அனைத்து வசதிகளோடும் கூடிய நல்ல கட்டிடத்திற்கு உடனடியாக மாற்றிடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றும், ஓசூர் சாரட்சியரும், வட்டாட்சியரும் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தியுள்ளனர்.
ஒய்.சந்திரன்
