விழுப்புரம்,டிச.17- சட்டத்திற்கு புறம்பாக ஏரி,குளங்களை பொது ஏலம் விடுவோர் மற்றும் மீன் குத்தகை விடுவோர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார பிரிவு,ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் பாசன ஏரிகள்,குளங்கள் மற்றும் இதர சிறு பாசன குட்டைகள் உள்ளன. இந்த நீர் நிலைகள் ஆண்டு தோறும் பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை,ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய் துறை வாயிலாக மீன்கள் குத்தகை விடப்பட்டது அரசுக்கு வருவாய் ஈட்டும் நடைமுறை உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில்,தமிழக அரசு துறைக்கு சொந்தமான நீர் நிலைகளை ஊராட்சி மன்ற தலைவர்கள் அல்லது அவர்களை சார்ந்த தனி நபர்கள் குழுவாக இணைந்து அரசு விதிமுறைகளுக்கு மாறாக பொது ஏலம் விடும் நடைமுறை சில கிராமங்களில் நடைபெற்று வருகிறது. சட்டத்திற்கு புறம்பான பொது ஏலம் விடுபவர் மற்றும் மீன் பிடிப்பவர் மீது அபராதம் விதிக்கப்பட்டு மீன்கள்,வலைகள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.