சென்னை,பிப்.6- சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் தற்போது அதிக அளவில் குடியிருப்புகள் பெருகி வருகிறது. இந்த நிலையில் பெரும் பெரும் பாக்கம் ஊராட்சியின் பின் பகுதியில் ஜல்லடியான் பேட்டை பிரதான சாலையில் உள்ள காலி இடம் குப்பைகளை சேகரிக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு சேகரிக்கப் படும் குப்பைகள் பின்னர் அங்கிருந்து வாகனங்கள் மூலம் ஓரகடம் அருகே உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. சுற்றிலும் குடியிருப்புகள் உள்ள நிலையில் குப்பை சேகரிக்கும் இடம் தற்போது குப்பை கிடங்காக மாறிவருகிறது. மேலும் இங்கு கொட்டப்படும் குப்பை கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படாமல் அங்கேயே குவிந்து வருகிறது. உணவுக்காக வரும் தெருநாய்கள் கழிவுகளை இழுத்து சாலையோரம் போட்டு செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். இங்கு கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவது ஊராட்சி நிர்வாகத்திற்கும் சவாலாக உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள குப்பை சேகரிப்பு மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.