districts

img

பராமரிக்கப்படாத பட்டரவாக்கம் ரயில் நிலையம்: பயணிகள் அவதி

அம்பத்தூர், அக். 6- அம்பத்தூர் அருகே பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி கள் இன்றி பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை சென்ட்ரல் அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் அம்பத்தூர்  அருகே பட்டரவாக்கம் ரயில் நிலை யம் உள்ளது. இந்த வழியாக தினசரி  125க்கும் மேற்பட்ட மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்  நிலையத்தை பயன்படுத்தி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்து செல்கின்றனர். மேலும் பட்டரவாக்கம், மங்கள புரம், கச்சினாக்குப்பம், மண்ணூர் பேட்டை, மேனாம்பேடு, கருக்கு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்க ளும் தங்களது பணி நிமித்தமாக பட்டரை வாக்கம் ரயில் நிலையம் மூலம் செல்கின்றனர். இந்த ரயில் நிலையம்  தொழிலாளர்களுக்கும், பொது மக்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் இந்த ரயில் நிலை யத்தில் அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் தொழி லாளர்கள், பொதுமக்கள் தினசரி அவதிப்பட்டு ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். ரயில் நிலையத்தின் நடைமேடை முழுவதும் மேற்கூரை முழுமையாக அமைக்கப்படவில்லை. இதனால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயணிகள் அவதிப்படுகின்றனர். தண்ணீர் இன்றி கழிப்பறை பயன் படுத்த முடியாமல் பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது.

இதனால் பெண்  பயணிகள் இயற்கை உபாதைகளை  கழிக்க முடியாமல் அவதிப்படுகின்ற னர். ரயில் நிலையத்தை சுற்றி ஆண் பயணிகள் ஆங்காங்கே சிறுநீர் கழிப்ப தால் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று  நோய் பரவும் அபாயமும் உள்ளது. நடைமேடையில் உள்ள பல இடங்களில்  குழாய்களில் தண்ணீர் வராததால், குடிநீர் தொட்டி சுகாதாரமின்றி கிடக்கி றது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் கட்டடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு அமைக்கப்பட்ட மின்சாதனப் பெட்டி உடைந்து மின்சார வயர்கள் பாதுகாப்பு இன்றி செல்கிறது. மேலும் ரயில் நிலையத்தில் முழுமையாக மின்விளக்கு எரிவதில்லை. இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் பெண் பயணிகளிடம் சங்கிலி, கைப்பேசி  பறிப்பு, பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு  வருகின்றனர். இங்கு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படவில்லை. இதனால் வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் சமூக விரோதிகளை அடையாளம் காண முடியவில்லை. இங்கு நடை மேம்பாலம் இருந்தும், அதனை பெரும்பாலான பயணிகள் பயன்படுத்துவதில்லை.

பயணிகள் தண்டவாளத்தை கடந்துதான், ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இதனால் சில சமயங்களில் பயணிகள் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கின்றனர். ரயில்வே காவல் துறையினர், ரயில்வே பாதுகாப்பு படையினர் முறையாக ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. இதனால் பெண் தொழிலாளர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். ரயில் நிலையத்துக்கு தொழிற்பேட்டை பகுதிகளிலிருந்து வந்து செல்வதற்கு மினி பேருந்து  வசதியில்லை. இதனால்  தொழிலாளர்கள் வேலை முடிந்து தொழிற்சாலைகளில் இருந்து நடந்தே ரயில் நிலையத்திற்கு வர வேண்டிய அவல நிலை உள்ளது. மேற்கண்ட பிரச்சனை குறித்து பொதுமக்கள் பலமுறை தென்னக ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ரயில்வே அதிகாரிகள் பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் மேற்கூரை, குடிநீர்,  மின் விளக்குகள், பாதுகாப்பு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி களை முழுமையாக நிறைவேற்றி தர  வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர். - எஸ்.ராமு

;