பாடகர் மாணிக்க விநாயம் மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை, டிச.26-
தமிழ் திரைப்பட பின்னணி பாடகராகவும், திரைக்கலைஞராகவும் வலம் வந்த மாணிக்க விநாயம் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரைக்கலைஞர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறையில் 1948 ஆம் ஆண்டு பிறந்த மாணிக்க விநாயம், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி.ராமய்யா பிள்ளையில் இளைய மகனாவார். இவர் திரைக்கலையில் பாடகர் மட்டுமின்றி திரைக்கலைஞராகவும் பயணித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு வெளியான தில் படத்தில் துவங்கிய இவரது பாடல் பயணம், 2021 ஆம் ஆண்டு வெளியான கர்ணன் படம் வரை தொடர்ந்தது. இவர் ஜெயம், திருப்பாச்சி, தூள் உள்ளிட்ட படங்களில் பாடகராகவும், திருடா திருடி, திமிரு, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் திரைக்கலைஞகராவும் நடித்துள்ளார். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தி பாடல்களும் பாடியுள்ளார். வித்தியாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்களிடம் வெற்றிப் பாடல்களைப் பாடி தனக்கென்று பொதுமக்களிடம் ஓர் இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பாடகர் மாணிக்க விநாயகம், ஞாயிறன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, துன்பமானாலும், துள்ளலானாலும் தனது குரல் வளத்தால் அவ்வுணர்வுகளை துல்லியமாக்க் கடத்தி விருந்தளித்தவர், பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த, வழுவூர் மாணிக்க விநாயம் பிரிவு வருத்தமளிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசால் 2003 ஆம் ஆண்டு ‘கலைமாமணி’ விருதும், 2008 ஆம் ஆண்டு ‘இசைமேதை’ பட்டமும் பெற்ற குரல் வள கர்ணன் மாணிக்க விநாயகம் மறைவிற்கு திரைக்கலைஞர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.