சென்னை,டிச.20- சென்னை மாநகரை தூய்மை நகரமாக மாற்றும் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. மாநகர பகுதிகளை பசுமையாகவும், குப்பை இல்லாத நகரமாகவும் மாற்றும் வகையில் பூங்காக்கள், சாலையோர பகுதிகளை சீர்ப்படுத்துதல், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அழகுப்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர சென்னையில் உள்ள அரசு பொது சுவர்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் பல வண்ணங்களால் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
சாலைகள், தெருக்களில் குவியும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றும் பணி நடைபெறுகிறது. பகல் நேரங்களில் மட்டும் குப்பை கழிவுகளை அகற்றுவது மட்டுமின்றி இரவு நேரங்களிலும் இந்த பணி நடைபெறுகிறது. மழை படிப்படியாக குறைந்ததால் இந்த பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகாரிகள் தலைமையில் சாலைகளை தூய்மைப்படுத்தும் பணி திங்கள் முதல் 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையை அழகுபடுத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து குண்டும், குழியுமான சாலைகள் சீரமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. சென்னையில் உள்ள மேம்பாலங்கள், பூங்காக்கள், காலி இடங்கள் போன்ற வற்றை அழகுப்படுத்துவதற்கு அனைத்து திட்டங்களையும் மாநகராட்சி வகுத்துள்ளது. 1000-க்கும் மேற்பட்ட பகுதி களில் உள்ள சாலைகளில் சுத்தம் செய்யும் பணி தொடங்கி உள்ளது.