திருவள்ளூர், டிச 8- பழங்குடியின மக்களுக்கு குடிமனை பட்டா மற்றும் இனச் சான்றிதழ் கேட்டு பொன்னேரியில் புதனன்று (டிச8) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியை அடுத்த சிறுபுழல்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகரில் வசிக்கும் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த 15 குடும்பங்களுக்கும், கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவில் குடியிருக்கும் 23 நரிக்குறவர் குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஒரு மாதத்தில் பட்டா வழங்கப்படும் என பொன்னேரி கோட்டாட்சியர் எழுத்து பூர்வமாக உறுதியளித்தார். மூன்று மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கோட்டாட்சியரை கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், சிஐடியு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பில் பொன்னேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தை இதையடுத்து நடை பெற்ற பேச்சுவார்த்தையில் குடிமனை பட்டா குறித்து உரிய விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.மலைக்குறவர் இன மக்களுக்கு மானுடவியல் துறையினரின் விசாரணை அடிப்படையில் பழங்குடி இன சான்றிதழ் வழங்கப்படும் என கோட்டாட்சியர் செல்வம் தெரிவித்தார். இந்த போராட்டத்திற்கு சாலை வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி டில்லிபாபு, மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம், மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, திருவள்ளூர் மாவட்ட கொண்டா ரெட்டிஸ் பழங்குடி மக்கள் நலச்சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், சிபிஎம் கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், பொன்னேரி பகுதி செயலாளர் சேகர் (சிபிஎம்), சிஐடியு மாவட்ட நிர்வாகி ஜி.சூரியபிரகாஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் த.கன்னியப்பன், மாவட்டப் பொருளாளர் எம்.சிவக்குமார் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.