districts

இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய கூட்டம்

சென்னை, ஜன. 8- ஞாயிற்றுக்கிழமை (ஜன.9)  முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி சனிக்கிழமை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் மூடப்படுகின்றன. ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதே போல இறைச்சி கடைகளும் மூடப்படுகின்றன. முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிற்று கிழமைகளில் பெரும்பாலம் ஆசைவ பிரியர்கள் இறைச்சி மற்றும் மீன்கள் வாங்குவது வழக்கம்.

நாளை இறைச்சி கடைகள் முழுவதுமாக மூடப்படுவதால் அவர்கள் இன்றே இறைச்சிகளை வாங்க குவிந்தனர். இதனால் ஆடு, கோழி, மீன் ஆகிய இறைச்சி கடைகளில் இன்று காலை முதலே கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசை காணப்பட்டது. காலை 6 மணிக்கெல்லாம் இறைச்சி கடைகளில் மக்கள் குவிய தொடங்கினார்கள். இரவு 10 மணி வரை அனைத்து இறைச்சி கடைகளும் செயல்பட்டன. இதற்காக கறி கோழிகள் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. பண்ணைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கறிகோழிகள் கடைகளுக்கு அதிகளவில் விற்பனைக்காக இறக்கப்பட்டன. பகல் முழுவதும் இறைச்சி கூடங்களில் ஆடுகள்- மாடுகள் வெட்டப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டன. சென்னையில் காசிமேடு மீன்பிடி துறைமுகம், சிந்தாதிரி பேட்டை மீன் சந்தை மற்றும் இதர மீன் சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதே போல் மளிகை கடைகள், காய்கறி கடைகள், உணவுப் பொருட்கள் விற்பனை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டன.

;