சென்னை, டிச. 8- சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமா லத்தீப் வழக்கு விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாத்திமா லத்தீப்பின் தந்தை அப்துல் லத்தீப் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தினார். இந்த சந்திப்பின் போது வழக்கறிஞர் முகமது ஷா, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவா`ஹிருல்லா ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் அப்துல் லத்தீப் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது மகள் தற்கொலை செய்து கொண்டு 2 வருடம் 1 மாதம் ஆகிவிட்டது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஸ்டாலினை சந்தித்து முறையிட்டேன். தற்போது முதல்வராக உள்ள அவரை சந்தித்து விசாரணை விரைந்து முடித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன் என்றார். லத்தீப்பின் வழக்கறிஞர் முகமது ஷா கூறுகையில், 2019 டிசம்பர் மாதம் சிபிஐ விசாரணை தொடங்கிய நிலையில் 2 வருடங்கள் ஆகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. தாமதத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றார். ஜவாஹிருல்லா பேசுகையில், கோட்டூர்புரம் காவல் துறையினர் விசாரித்து வந்த இந்த வழக்கு மத்திய புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்ட பிறகும், ஆமை வேகத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை நேர்மையான முறையில் செல்ல வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார். முதல்வர் இதுகுறித்து முழுமையான விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார் என அவர் கூறினார்.