விழுப்புரம், மார்ச் 14- தனக்கு சேர வேண்டிய வீட்டு மனையை கொடுக்காமல் சகோதரர் ஏமாற்றியதால் பாதிக்கப்பட்ட சகோதரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறுவது வழக்கம், ஆனால் கொரோனா கால நடைமுறைகள் இன்னும் நீடித்து வருவதால் நேரடியாக மனுக்களை வாங்கும் நடைமுறை இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட நெனையாவாடி கிராமத்தை சேர்ந்த வேலு என்பவரின் மனைவி சரஸ்வதி (45) என்பவர் தன் உடன் பிறந்த சகோதரர் தனக்கு சேர வேண்டிய வீட்டு மனையை வழங்காமல் ஏமாற்றியதாகக் கூறி தன் கணவருடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது திடீரென சரஸ்வதி தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே சென்று அவரை தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீர் ஊற்றி அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.