districts

img

ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராக உதயகுமார் பதவியேற்பு

அம்பத்தூர், மார்ச் 4- ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராக உதயகுமார் பதவியேற்றுக்கொண்டார்.  2019ஆம் ஆண்டு ஆவடி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் பிறகு முதன்முறையாக தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பழைய நிலையில் இருந்த 48 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 35 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும், காங்கிரஸ், மதிமுக தலா 3 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, சுயேட்சை தலா ஒரு இடத்திலும்  வெற்றி பெற்றன.  வெற்றிபெற்ற அதிமுகவினர் இரண்டுபேர் திமுகவில் இணைந்து விட்டனர். இந்நிலையில் மாநகராட்சி மறைமுக மேயர் தேர்தல் வெள்ளியன்று (மார்ச் 4) நடைபெற்றது. இதில்  9ஆவடி வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜி.உதயகுமார் மேயர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், மாநகராட்சி ஆணையர் உதயகுமார் வெற்றிபெற்றதாக அறிவித்தார். இதையடுத்து அவருக்கு ஆணையர் பதவிப் பிரமாணம் செய்து வைத்து, செங்கோலை வழங்கினார். ஆவடி மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையையும் உதயகுமார் பெற்றுள்ளார். பின்னர் மதியம் 2 மணியளவில் துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 23ஆவது வார்டில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.சூரியகுமார் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், சூரியகுமார் வெற்றிபெற்றதாக அறிவித்து, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் அமைச்சர் சா.மு.நாசர், மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவருக்கும் பூங்கொத்து வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.