விழுப்புரம், செப். 4 - திண்டிவனம் நகராட்சி அலுவல கத்தில் பணிபுரியும் பட்டியலின ஊழி யரை காலில் விழ வைத்த கொடூர நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து வியாழக்கிழமை(செப்.4) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த எஸ்.முனியப்பன் இளநிலை உதவியாளராக பணி யாற்றி வருகிறார். கடந்த மாதம் 28ஆம் தேதி அலுவலக பணியில் ஈடு பட்டிருந்த போது, 20வது வார்டு கவுன்சிலர் ரம்யா தனது வார்டில் நடைபெற்ற பணிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான பழைய கோப்பு ஒன்றை கேட்டுள்ளார். அதை தேடி எடுப்பதற்கு சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கவுன்சி லர் ரம்யா, முனியப்பனை தகாத வார்த்தைகளில் திட்டினார். மேலும், நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கண வர் ரவிச்சந்திரனிடம், அந்த ஊழியர் தன்னை தகாத வார்த்தைகளில் திட்டியதாக பொய் சொல்லியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் நகராட்சி ஆணையர் இல்லாத நேரத்தில், அவரது அறைக்கு அந்த ஊழியரை வர வழைத்து ரம்யாவிடம் மன்னிப்பு கேட்க கூறியுள்ளார். அவர் உடனே ‘மன்னித்து விடுங்கள்’ என கூறி யுள்ளார். இதை ஏற்க மறுத்த ரம்யா ‘காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கூறியுள்ளார். இதற்கு பட்டியலின ஊழியர் மறுப்பு தெரிவித்தார். காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவில்லை என்றால், புகார் செய்து வேலையைவிட்டு நீக்கி விடுவேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து, நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரன் வற்புறுத்தலின் பேரில் நகராட்சி அலுவலகத்திலேயே ரம்யாவின் காலில் விழுந்து, அந்த ஊழியர் மன்னிப்புக் கேட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, நகராட்சி ஊழியரை காலில் விழ வைத்த கவுன்சிலர் ரம்யா மற்றும் காலில் விழ வற்புறுத்திய நகர்மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக, அதிமுக, விசிக கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் புகார் கொடுத்தனர். சிபிஎம் கண்டனம் இந்த சாதிய வன்கொடுமை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். கவுன்சிலர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு நகராட்சி அலுவலகத்தில் பட்டிய லின ஊழியரை காலில் விழ வைத்த விவகாரம் தொடர்பாக நகரமன்ற உறுப்பினர் ரம்யா, நகராட்சி தலை வரின் கணவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆர்ப்பாட்டம் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு சிபிஎம் வட்டக் குழு உறுப்பினர் டி.ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செய லாளர் பி.சுகந்தி, மாநில செய லாளர் பழ.வாஞ்சிநாதன், சிபிஎம் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், முன்னணியின் மாவட்டத் தலைவர் எஸ்.முத்து குமரன், செயலாளர் எம்.கே.முரு கன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பி.குமார், ஜி.ராஜேந்திரன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன், மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஆர்.தாண்டவராயன், விதொச மாவட்டச் செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, செயலாளர்கள் செஞ்சி ஆல்பர்ட் வேளாங்கண்ணி, கெ.மூர்த்தி, தமிழரசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.