districts

img

தோழர் எஸ்.வி.எஸ்.மணி துணைவியார் எம்.பத்மாவதி அம்மாள் காலமானார்

சென்னை, மே 26 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை-செங்கல்பட்டு மாவட்டச் செய லாளராக செயல்பட்டு மறைந்த தோழர் எஸ்.வி.எஸ். மணியின் மனைவி எம்.பத்மாவதி அம்மாள் சென்னையில் உடல் நலக்குறைவால் வியாழனன்று (மே 26) காலமானார். அவருக்கு வயது 81. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம், வடசேரி கிராமத்தை சேர்ந்த தோழர் எஸ்.வி.எஸ். மணிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த பத்மாவதிக்கும் 1954 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் இருவரும் சென்னையில் குடியேறினர். அதன் பின்னர் தோழர் எஸ்.வி.எஸ்.மணி  கட்சி உறுப்பினரானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது, சென்னை – செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக இருந்த தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அப்போது தோழர் எஸ்.வி.எஸ்.மணி கட்சியின் பொறுப்பு மாவட்டச் செயலாளராக பணி யாற்றினார். வடபழனியில் வசித்து வந்த தோழர் எஸ்.வி.எஸ்.மணி, 2010ம் ஆண்டு உயிரிழப்பதற்கு முன்பு, மனைவி பத்மாவதியுடன் விவாதித்து, தனது இல்லத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சிக்கு தானமாக வழங்கினார். முதுமையின் காரணமாக உடல் நலம் குன்றி இருந்த எம்.பத்மாவதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழனன்று உயிரிழந்தார். அன்னாரது உடல் வடபழனியில் உள்ள கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் (வடபழனி பேருந்து நிலையம் எதிரில்) அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. எம்.பத்மாவதியின் உடலுக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.வெள்ளைச்சாமி, எஸ்.குமார், மூத்த தலைவர் டி.நந்தகோபால், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, இ.மூர்த்தி, சி.செங்கல்வராயன், எஸ்.ஜெயசங்கரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அன்னாரது உடல் வெள்ளியன்று (மே 27) மதியம் 2 மணி அளவில் ஏவிஎம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.