காஞ்சிபுரம், ஜூன் 4-
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, செ.நாச்சிபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமஜெயம் (38). இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி ரத்னா (30). இவர்களது மகள்கள் ராஜலட்சுமி (5), தேஜாஸ்ரீ (2), மற்றும் 4 மாத ஆண் குழந்தையுடன் சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் சென்னையில் மாமனார் வீட்டில் தங்கியிருந்த மனைவி மற்றும் மகள்கள் மற்றும் புதிதாக பிறந்த ஆண் குழந்தையை அழைத்து வர ராமஜெயம் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து சனிக்கிழமை மாலை அவர் தனது சித்தப்பா மகன் ராஜேஷ் என்பவரு டன் சென்னைக்கு காரில் வந்தார். பின்னர் அவர்கள் ரத்னா, மகள்கள் ராஜலட்சுமி, தேஜாஸ்ரீ, கைக் குழந்தையை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை திரும்பிக் கொண்டிருந்தனர்.
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே சித்தேரி மேடு பகுதியில் நள்ளி ரவு 12 மணியளவில் கார் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவ தும் நொறுங்கியது. இதில் இடி பாடுகளில் சிக்கிய ராமஜெயத்தின் மனைவி ரத்னா, அவரது மகள்கள் ராஜலட்சுமி, தேஜாஸ்ரீ, கைக்குழந்தை மற்றும் ராஜேஷ் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியா னார்கள். காரை ஓட்டி வந்த ராம ஜெயம் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலு செட்டி சத்திரம் காவல் துறையினர் படுகாயமடைந்த ராமஜெயத்தை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான ரத்னா உள்பட 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.