districts

img

சி.கருப்பையன் முதலாமாண்டு நினைவுநாள் என்.குணசேகரன் அஞ்சலி

சென்னை, ஜூன் 5 - மக்களின் வாழ்வாதாரத்திற்கு நடத்தும் போராட்டங்கள் நம்பிக்கை அளிப்பதோடு, கட்சியின் வளர்ச்சிக்கு அடித்தளமிடுகின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கூறினார். குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட இருந்த சென்னை விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி நீண்ட போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றது.  இந்தப் போராட்டத்தில் குடும்பத்தோடு பங்கெடுத்த முன்னாள் ராணுவ வீரர் சி.கருப்பையன், தனது உடமைகள் முழுமையும் கட்சிக்கு அளித்து விட்டு எளிமையாக வாழ்ந்தவர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்தாண்டு உயிரிழந்த அன்னாரது முதலாமாண்டு நினைவு நாள் ஞாயிறன்று (ஜூன் 5) அனுசரிக்கப்பட்டது. பல்லாவரம் பகுதி, பொழிச்சலூரில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு என்.குணசேகரன் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் பேசிய என்.குணசேகரன், தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட கட்சி இடைக்குழுக்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் மக்கள் பிரச்சனைக்காக தினசரி போராடிக் கொண்டிருக்கின்றன. இந்த போராட்டங்களே பல தரப்பினரையும் கட்சியின் பக்கம் ஈர்ப்பதோடு, மக்கள் நம்பும் சக்தியாகவும் மாற்றுகிறது என்றார். கட்சி வளர வேண்டும் என்று தோழர் கருப்பையன் தனது இறுதி மூச்சுவரை குறிக்கோளோடு இருந்தார். கட்சியின் நிலைபாடுகளை உள்வாங்கி செயல்பட்டார். கட்சி வளர்ச்சிக்கு பயனுள்ள வகையில் தனது பங்களிப்பையும், உதவியையும் செய்து வந்தார்.  சோர்வு ஏற்படும் தருணங்களில் நம்பிக்கையோடு செயல்பட்ட கருப்பையனை நினைவு கூர்வோம் என்று கூறிய குணசேகரன், மக்களின் வாழ்வாதாரத்திற்காக நாம் நடத்தும் போராட்டங்களே சோர்வை நீக்கி, நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. அதனை தொடர்வோம் என்றார். கட்சியின் பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.நரசிம்மன், எம்.தாமோதரன், எஸ்.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.

;