districts

சென்னை விமான நிலையத்தில் மூடிக்கிடக்கும் குடியுரிமை கவுண்டர்கள்

சென்னை, ஜூலை 20-  சென்னை சர்வதேச விமான நிலையத்தில்  குடியுரிமை பிரிவில் போதிய அலுவலர்கள்  இல்லாததால் கவுன்டர்கள் மூடிக்கிடக்கிறது.  இதனால், பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்வுக்குப் பிறகு, சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்திற்கு, விமான சேவைகள் படிப்படியாக அதிகரித்து வருகி றது. தற்போது நாளொன்றுக்கு 42 க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னைக்கு வந்து  செல்கின்றன. அதில், 31 விமானங்கள் இரவு நேர விமானங்கள். இதனால் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. அத்தகைய பயணிகளை பரிசோதிக்க 56 குடியுரிமை கவுண்டர்கள் உள்ளன. அதில், புறப்பாடு பகுதியில் 22 கவுண்டர்கள், வருகை பகுதியில் 34 கவுண்டர்கள் அமைந்துள்ளன. ஆனால் பெரும்பாலான கவுண்டர்களில் குடியுரிமை அலுவலர்கள் இருப்பதில்லை. அதனால் மூடியே கிடக்கிறது. திறந்திருக்கும் சில  கவுண்டர்களில் உள்ள குடியுரிமை பிரிவில்  பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் பயணிகள் சோதனை முடிந்து வெளியே வர இரண்டரை மணி நேரத்திற் ்கும் மேலாகிறது. இதுபற்றி, விமான நிலைய அதிகாரிகள்  வட்டாரத்தில் விசாரித்த போது, ‘சென்னை விமான நிலையம், இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. ஆனால் குடியுரிமை பிரிவு,  ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் உள்ளது.  எனவே உள்துறை அமைச்சகம் தான் குடியுரிமை பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். இது சம்பந்தமாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனா லும் உள்துறை அமைச்சகம் இதுவரை யில் குடியுரிமை அதிகாரிகளை நியமிக்கப் படவில்லை. அதனால்தான் முழு அளவிலான கவுண்டர்கள் செயல்பட முடியவில்லை. தற்போது சுமார் 45க்கும் மேற்பட்ட குடி யுரிமை அலுவலர்கள் சென்னை விமான நிலையத்திற்கு புதிதாக பணி அமர்த்தப்பட இருக்கின்றனர். அவர்கள் வந்தால், பிரச்சனை தீர்ந்துவிடும்,’ என்றனர். இதே பதிலை கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக அதிகாரிகள் கூறி வருகின்றனர். எனவே, இப்பிரச்சனைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

;