விழுப்புரம், மார்ச்.12- விழுப்புரத்திற்கு வருகை தந்த தென்பிராந்திய ராணுவ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண், முன்னாள் படைவீரர் நல மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் போதிய வசதிகள் இருக்கிறதா? நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் இருப்பு விவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மருத்துவமனை யில் போதிய இடவசதி இல்லை. புதிதாக மருத்துவமனை கட்டுவதற்கு விழுப்புரம்- செஞ்சி சாலையில் 20 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் முன்னாள் படைவீரர் நல மருத்துவமனை உடனடியாக கட்ட நட வடிக்கை எடுக்கும்படி தென்பிராந்திய ராணுவ தலைவர் அருணிடம் முன்னாள் படைவீரர்கள் முறையிட்டனர். இதற்கு விளக்கம் அளித்த அதிகாரி, “ ராணுவ தலைமையகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை தொடர்ந்து முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் தென்பிராந்திய ராணுவ தலைவர் அருண் ஆய்வு மேற்கொண்டு அலுவலக முக்கிய கோப்புகளை பார்வையிட்டார். அதோடு அங்கிருந்த பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது கர்னல் வேல்முருகன், கர்னல் கார்கே, கர்னல் அனுச், விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அருள்மொழி, முன்னாள் படைவீரர்கள் நல தலைவர் மார்க், செயலாளர் அருளப்பன், பொருளாளர் சாலமன் உள்பட பலர் உடனிருந்தனர்.