districts

விலகிச் செல்லும் புயல் வெப்பம் மேலும் அதிகரிக்கும்

சென்னை, ஏப்.29-‘பானி’ புயல் வடக்கு, வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லச் செல்ல வெப்ப நிலை உயரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து கடந்த சனிக்கிழமை புயலாக மாறியது. இது தென்கிழக்கு வங்கக்கடல் அதையொட்டிய இந்திய கடலில் மையம் கொண்டிருந்தது. இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து மே 1 ஆம் தேதியில் வட தமிழகம் - தென் ஆந்திர கடற்கரைக்கு அருகில் வந்து அதன் பின்னர் திசை மாறி வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி நகர உள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-திங்கட்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி பானி புயல் சென்னைக்கு தென்கிழக்கே 810 கி.மீ. தொலைவிலும், திரிகோண மலைக்கு 620 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு 950 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என்றும் மே 1 ஆம் தேதி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து பின்னர் ஓடிசா கடற்கரையை நோக்கி வட கிழக்கு திசையில் நகரக்கூடும் என்றும் புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்திருக்கிறது. இந்த புயல் தமிழக கடற் கரையை கடக்க வாய்ப்பு இல்லை. இதனால் நேரடி பாதிப்பு இல்லை.இந்த புயல் வடக்கு தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரையை ஒட்டிய பகுதியில் நெருங்கி வரும் வேளையில் வடதமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த புயல் தற்போது 810 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இது வட தமிழகத்திற்கு 300 கி.மீ. தொலைவு வரை வந்து திசை மாறிச் செல்லக் கூடிய நிலை உள்ளதால் வடக்கு, வடமேற்கு திசை காற்று வீசி, வெப்ப நிலை உயரலாம். புயல் வடக்கு, வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லச் செல்ல வெப்ப நிலை உயரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் இந்த கோடையில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். 

;