districts

img

பாட்டாளி மக்களின் ஜீவச்சுடர் - கே.முத்தையா

1964ல் தமிழ்நாட்டில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மாநாட்டில்தான் அதுவரையில் மார்க்சிஸ்ட்களின் ஏடாக நடைமுறையில் இருந்து வந்த தீக்கதிர், தமிழ் மாநிலக்குழுவின் அதிகாரப்பூர்வ ஏடாக அறிவிக்கப்பட்டது.  சென்னை சைதாப்பேட்டையிலிருந்த கீதா அச்சகத்தில் ஆரம்பத்தில் வார இதழாக வெளிவந்தது. இதனை முடமாக்கிடும் வகையில் முனைந்த அரசின் அடக்குமுறை மட்டுமல்ல, மார்க்சிய வழியிலிருந்து தடம் புரண்டு கட்சியை ஆளும் வர்க்கத்தின் எடுபிடியாக மாற்றிட முயன்றவர்களை  முறியடித்திட தீக்கதிர் தொடர்ந்து போராடியது. நாங்கள் சிறையில் இருந்த போது, தோழர் அப்புவின் பெயரில் துவங்கி தீக்கதிரை நடத்த அனுமதித்திருந்தோம்.  அடுத்து, நிர்வாகப் பொறுப்பில் அமர்த்தப்பட்டார் எம்.ராமுண்ணி. சிறையிலிருந்து விடுதலையான பிறகு, நிர்வாகப் பொறுப்புகளையும் ஆசிரியர் பொறுப்புகளையும் கவனிக்கும்படி கே.முத்தையா நியமிக்கப்பட்டார்.

சிறிய சொந்த மிஷின்

1966 இல் தீக்கதிர், திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் ரோட்டிலுள்ள டைம்ஸ் அச்சகத்திலிருந்து வெளியிடப்பட்டது. அங்கு ஒரு டிரெடில் மிஷினில்தான் அச்சாகி வந்தது. தீக்கதிர் உருவாகி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு பத்திரிகையான பிறகு, தீக்கதிருக்கு என்று ஒரு சொந்த சிலிண்டர் மிஷின் வாங்கப்பட்டது. எனினும், வார இதழாகவே தொடர்ந்து சென்னையிலிருந்து வெளிவந்தது.

அவசர நிலைக் காலத்தில்

அவசர நிலைக் காலத்தில் தீக்கதிர் இந்திய அரசின் சென்சார் போர்டு தாக்குதலின் போதும், அந்த சிரமங்களுக்கு இடையிலும் தொடர்ந்து போராடியது. ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடியது.

மதுரைக்கு வந்தது

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ் மாநிலக்குழு தீக்கதிரை மதுரைக்கு மாற்றுவது என முடிவு செய்தது. 1969 ஆம் ஆண்டு மதுரையில் வடக்கு சித்திரை வீதிக்கு, சென்னையில் வாங்கிய ஒரு சிலிண்டர் மிஷினுடன் தீக்கதிர் வந்து சேர்ந்தது. மேலும் ஒரு சிலிண்டர் மிஷின் வாங்கி ஆரம்பத்தில் வார இதழாகவும், பிறகு நாளிதழாகவும் கொண்டு வரப்பட்டது. சிலிண்டர் மிஷினில் நாளிதழா? ஆம். இதனுடைய வேகமோ ஒரு மணிக்கு ஆயிரம் பிரதிகள்தான். இரண்டு மிஷின்களைக் கொண்டு 4 பக்கம் தீக்கதிர் நாளிதழ் வெளியிடப்பட்டது. இது ஒரு கடுமையான சோதனைதான் எனினும், கொஞ்ச காலம் நடந்தது.

பைபாஸ்ரோடு அலுவலகம்

இதிலிருந்து இன்னொரு பயணம், அதுதான் மதுரை பைபாஸ் ரோட்டிலுள்ள அலுவலகத்தை விலைக்கு வாங்கி, அங்கிருந்து நாளிதழ் வெளியிடப்பட்டது. இந்தக் கட்டத்தில்தான் அவசரகால பிரகடனம் வந்தது. அதன் கொடுவாளுக்கு இரையான முதல் நாளிதழ் தீக்கதிர்தான்.  நாளிதழ் வார இதழாக மாற்றப்பட்டது. மீண்டும் 1978 இல் இருந்துதான் நாளிதழாக வெளிவர ஆரம்பித்தது. பிளாட்பெட் ரோட்டரி அச்சு இயந்திரத்தில் அச்சடிக்கப்பட்டது. இது நமது சகோதர ஏடான தேசாபிமானியால் நன்கொடையாக வழங்கப்பட்டது ஆகும். இந்த பிளாட்பெட் ரோட்டரி அச்சு இயந்திரமும் பழங்காலத்திய மிஷின் ஆதலால், மணிக்கு 1500 பிரதிகளே அச்சடித்தது.

கருத்துப் பத்திரிகை

நவீன பத்திரிகை உலகத்திலே இந்த ஆமை வேகத்தில் ஓடும் இயந்திரத்தை வைத்துக் கொண்டு எவ்வாறு செய்திகளை முந்தித் தர முடியும்?. மற்ற ஏடுகளைப் போல், செய்திகளைக் கொடுத்து போட்டியிட முடியாத தீக்கதிர் நாளேடு, ஒரு கருத்துப் பத்திரிகையாகவே வெளிவந்தது. 1987 மே மாதம் 2 ஆம் தேதி வரை அவ்வாறு வெளிவந்தது.  1987 மே மாதம் 3 ஆம் தேதியிலிருந்து டெலிபிரிண்டர் போன்ற நவீன வசதியுடன் காலைப் பதிப்பாக ஒரு பரீட்ச்சார்த்த முயற்சியாக தீக்கதிர் செய்திப் பத்திரிகையாகவும் வெளிவர ஆரம்பமாயிற்று. ஜூலை 18 லிருந்துதான் மணிக்கு 18 ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கக் கூடிய ஆப்செட் அச்சு இயந்திரத்தில் தீக்கதிர் வளாகத்தில் ஏ.பி.நினைவகம் என்ற புதிய கட்டிடத்தில் தீக்கதிர் நாளிதழ் காலைப் பதிப்பாக புதிய பொலிவுடன் வெளிவருகிறது. இச்சாதனையை சாதித்தது மார்க்சிஸ்ட் கட்சியை நேசிக்கும் தமிழகத்தில் உள்ள கருத்தாலும் கரத்தாலும் உழைக்கும் மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், அனுதாபிகளுமே நம் கட்சியின் வேண்டுகோளை ஏற்று தாராளமாக வழங்கிய 17 லட்சம் நிதியினால்தான் இது சாத்தியமாயிற்று. பெரும் பணம் படைத்தவர்களால் நடத்தப்படும் ஏடுதான் இப்படிப்பட்ட நவீன அச்சு இயந்திரங்களை பயன்படுத்த முடியும் என்ற இன்றைய எதார்த்த நிலைக்கு மாறாக, புரட்சிகர சிந்தனை உள்ள உழைப்பாளிகளும், முற்போக்கு சிந்தனையுள்ள நடுத்தர வர்க்க மக்களும் அணிதிரண்டால், இதனை சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.