districts

பேக்கரிகளில் டீ, காபி விலை உயர்வு

கோவை, செப்.4- கோவையில் உள்ள பேக்கரிகளில் டீ மற்றும் காபியின் விலை உயர்ந்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பேக்கரிகளில், திடீரென டீ-யின் விலை 15 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும், காபியின் விலை 20 ரூபாயில் இருந்து 26 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இஞ்சி தேநீர் 30 ரூபாய்க்கும், பால் இல்லாத கருப்பு தேநீர் (Black Tea) 17 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் கீழ் இயங்கும் 250-க்கும் மேற்பட்ட பேக்கரிகள் இந்த விலை உயர்வு முடிவை அமல்படுத்தியுள்ளன. அரோமா பேக்கரி, கே.ஆர்.பேக்கரி உள்ளிட்ட பல்வேறு பிரபல பேக்கரி உரிமையாளர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற சங்கக் கூட்டத்தில் இந்த விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டு, தற்போது சங்கத்துக்குட்பட்ட அனைத்து பேக்கரிகளிலும் அமலுக்கு வந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக கோவையில் டீ விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது கடை வாடகை, ஊழியர்களுக்கான சம்பளம், மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றின் காரணமாக இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்களின் அன்றாட உற்சாக பானங்களான டீ மற்றும் காபியின் விலை உயர்வு, கோவை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.