ஈரோடு, பிப்.4- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதுவரை ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் கொடுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு குழுக்களும், பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுக்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த புதனன்று இரவு ஈரோடு பேருந்து நிலையம் அருகே கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையின் போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்திய போது ரூ.1.74 லட்சம் பணம் இருந்தது. இது குறித்து காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரித்த போது அவர் ஈரோடு வி.வி.சி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த குமரவேல் (39) என்பது தெரிய வந்தது. மேலும் அந்த பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் நிலை கண்காணிப்பு குழுவினர் ரூ.1.74 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர். இந்நிலையில், சனியன்று நிதி நிறுவன உரிமையாளர் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.67,700 ரொக் கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுவரை 11 பேரிடம் இருந்து ரூ.14,16,000 ரொக்கத்தை பறி முதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.