districts

கடுமையான வறட்சியில் மலைப்பகுதிகள்

சென்னை, ஏப்.29-தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை தாம்பரத்தில் திங்களன்று மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் இரா.சரவணன்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:மலைப்பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் வனத்தைவிட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள்ளும், குடியிருப்புகளிலும் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. விவசாயப் பயிர்களை அழித்தும், மனித உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வசதிகளை வனத்திற்குள்ளேயே அரசு ஏற்படுத்திட வேண்டும். பயிர் அழிவுக்கு இயற்கை பேரிடராக கருதி முழுமையான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் இழப்பீடு தாமதமில்லாமல் வழங்குவதுடன், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ செலவு முழுவதையும் அரசு ஏற்க வேண்டும்

பழங்குடி மாணவர்க்கு சான்றிதழ்

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தினால் வருவாய்த்துறையினர் வழக்கமான பணிகளில் ஈடுபடுவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் மாணவர்கள் உயர்கல்வி செல்வதற்கு வருவாய்த்துறையினர் வழங்க வேண்டிய சான்றிதழ்களை உடனுக்குடன் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, பழங்குடியின மாணவர்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கிட தேர்தல்நடத்தை விதிகளை தளர்த்தி, தாமதமில்லாமல் இனச்சான்றிதழ் வழங்கிட அறிவுறுத்துமாறு தேர்தல் ஆணையத்தையும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசையும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

;