districts

img

யார் மீது பழிபோடுவது?

ஒவ்வொரு நாளும்
நடை பயிற்சியின் போது
கடந்துபோகும்
தண்ணீர் லாரிகளின் எண்ணிக்கை
கூடிக்கொண்டே போகிறது.

ஒவ்வொரு தெருவிலும்
இரவும் பகலும்
ஆழ்துளைக் கிணறு தோண்டும்
இயந்திரத்தின் இரைச்சல்
கேட்டுக்கொண்டே இருக்கிறது.

வீட்டின் பின்புறமுள்ள
சில நூற்றாண்டு பழமையான எரி
ஆலை ரசாயனக் கழிவுகளால்
நிரம்பி நாற்றமெடுக்கிறது

குடிநீர் கேன் விநியோக
சப்தமும் காட்சியுமாய்
ஒவ்வொரு நொடியும்
நகர்ந்து கொண்டே இருக்கிறது.

வானம் தினசரி இருண்டு
நாலு தூறல் போட்டு
போக்கு காட்டி போய்க்கொண்டே இருக்கிறது.

குளிர் நகரத்தில்
ஸ்வெட்டர்கள் பீரோவில்
அடைபட்டுவிட்டன
ஏசியும் ஃபேனும் மின்நுகர்வை
அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

பழியை யார் மீது போடலாம் ?
மூளையை கழற்றி வைத்துவிட்டு
மூக்கையும் கண்ணையும்
தீட்டிக் கொண்டிருக்கிறோம்.
நாக்கு தடித்துக் கொண்டிருக்கிறது.

சரி! சரி! யோசித்தது போதும்
தண்ணீர் லாரியில் அடிபடாமல்
தெருவில் நடக்கப் பழகு முதலில்.
- சுபொஅ