districts

img

கோவை: யானை தாக்கி மாணவர் பலி - பறவைகள் ஆராய்ச்சி மையத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம்!

கோவையில் பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் மாணவர் உயிரிழந்ததற்கு நிர்வாகமே காரணமென குற்றம்சாட்டி, ஆராய்ச்சி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே ஒன்றிய அரசு நிறுவனமான சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பறவை ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்கின்றனர்.

இந்த மையத்தில் கடந்த 16ஆம் தேதியன்று ராஜஸ்தானை சேர்ந்த விஷால் ஸ்ரீமல் (23) என்ற ஆராய்ச்சி மாணவர், இரவு உணவை முடித்துக் கொண்டு, நண்பர்களுடன் அறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ஒற்றை காட்டு யானை விஷாலை தாக்கியது.

இதனையடுத்து படுகாயத்துடன் இருந்த விஷாலை மீட்டு கேரள மாநில எல்லைக்குட்பட்ட கோட்டதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரது நண்பர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவருக்கு கால் மற்றும் இடுப்பு பகுதியில் எழும்பு முறிவு கண்டறியப்பட்ட நிலையில், மார்பில் ரத்த கசிவு இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று (மே17) அதிகாலையில் விஷால் உயிரிழந்தார்.

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/18/xlarge/991970.jpg

 

இந்நிலையில் மாணவர் விஷால் உயிரிழப்பிற்கு ஆராய்ச்சி மைய நிர்வாகமே காரணமென குற்றம்சாட்டி, அங்குள்ள சலீம் அலி சிலை முன்பு ஆராய்ச்சி மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், " விடுதியில் குடிநீர் கொடுக்காததால் கேண்டீனுக்கு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளது. விடுதியிலிருந்து கேண்டீன் 600 மீட்டர் தொலைவில் உள்ள நிலையில், அவ்வழியில் மின் விளக்குகள் வசதியில்லை. டார்ச்லைட் கேட்டதற்கு கூட நிர்வாகம் கொடுக்கவில்லை. விஷால் உயிரிழப்பிற்கு யானை காரணம் அல்ல, முறையான நிர்வாகமின்மையே காரணமெனவும், விஷால் உயிரிழப்பிற்கு நீதி வேண்டும்”. எனத் தெரிவித்தனர்.

;