districts

img

சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஆலோசனை

திருவண்ணாமலை, ஜன. 22- திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள சாத்தனூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் க.சு. கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.   செவ்வாயன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, மத்திய பெண்ணையாறு வடிநில கோட்டம் செயற் பொறியாளர்கள் மகேந்திரன் (திருவண்ணாமலை), ஜவஹர் (விழுப்புரம்), சாத்தனூர் அணை உபகோட்ட உதவி செயற் பொறியாளர் அறிவழகன், அரசு அலுவலர்கள், பாசனதாரர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 119 அடி, முழுக் கொள்ளவு 7321 மி.க. அடி ஆகும். அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 8 மணியளவில் 97.70 அடியாகவும், தற்போதைய கொள்ளளவு 3427 மி.க. அடியாகவும் உள்ளது.

திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பரப்புக்கு வழங்க வேண்டிய உரிமை நீர் 1200 மி.க. அடி, இதன்படி மீதமுள்ள நீரின் அளவு 2227 மி.க. அடி ஆகும். சாத்தனூர் அணை குடியிருப்புகளுக்கான குடிநீர், பூங்கா பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு ஆகியவற்றுக்கான நிலையான இருப்பு 307.42 மி.க. அடி, நீர் இழப்பு (10 மூ) 342.70 மி.க. அடி ஆகும். திருவண்ணாமலை நகரம், தானிப்பாடி, சாத்தனூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் புதுப்பாளையம் நகராட்சி மற்றும் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்கு 11 மாதங்களுக்கு தேவைப்படும் நீரின் அளவு 322.22 மி.க. அடி. மண் தூர்வினால் 1982 முதல் 2013 முடிய ஏற்பட்ட தோராய நீர் இழப்பு 500.00 மி.க. அடி. இதன் அடிப்படையில் மொத்த நிகர நீர் இருப்பு 754.64 மி.க. அடி ஆக உள்ளது.

சாத்தனூர் நீர்த்தேக்கத்தின் மூலம் தற்போதைய நீர் இருப்பின்படி தண்ணீர் திறந்துவிடப்படும் நீரின் அளவு, சாத்தனூர் இடதுபுறக் கால்வாய் 35 நாள்களுக்கு 302.40 மி.க. அடி, வலதுபுறக் கால்வாய் 35 நாள்களுக்கு 453.60 மி.க. அடி. மேலும், சாத்தனூர் நீர்த்தேக்கத்தின் மூலம் தற்போதைய நீர் இருப்பின்படி பயன்பெறும் பாசன பரப்பு, சாத்தனூர் இடதுபுறக் கால்வாய் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 ஏரிகள், 30 கிராமங்கள், 1950 ஏக்கர் ஆயக்கட்டும், விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஏரிகள், 10 கிராமங்கள், 949 ஆயக்கட்டு, சாத்தனூர் வலதுபுறக் கால்வாய் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏரிகள், 4 கிராமங்கள், 280 ஆயக்கட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் 44 ஏரிகள், 42 கிராமங்கள், 4364 ஆயக்கட்டும், திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 17 ஏரிகள், 18 கிராமங்கள், 5000 ஆயக்கட்டுகளும் பலன் பெறும்.

;