கிருஷ்ணகிரி, ஜூன் 20- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் காரண்டப்பள்ளி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 25 வீடுகள் தலித் மக்களுக்கு சொந்தமானதாகும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறர்கள். இவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் சுடுகாடு இல்லை. இதனால், ஊருக்கு ஒதுக்குப்புறமாக குண்டும், குழியும் புதர்மண்டிகிடக்கும் அரசு புறம் போக்கு நிலத்தில் புதைத்து வருகின்றனர். அந்த சுடுகாட்டிற்கு செல்ல வேறு வழி இல்லாததால் சேரும் சகதியுமான 4 அடி ஆழம் நிற்கும் குட்டைக்குள் இறங்கிச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இந்நிலையில், காரண்டப்பள்ளியில் இறந்த ஒருவர் உடலை புதைப்பதற்கு குட்டை சேற்றுக்குள் இறங்கியே எடுத்துச் சென்றனர். இந்நிலையறிந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கெலமங்கலம் ஒன்றியச் செயலாளர் ராஜா சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியருக்கும் தேன்கனிக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவருக்கும் விடுத்துள்ள கோரிக்கை மனுவில், காரண்டப்பள்ளி தலித் குடும்பங்களுக்கு உடனடியாக சுடுகாட்டிற்கு அரசு நிலம் ஒதுக்கி, ஆழ்துளை கிணறு, தகனமேடை, நிழற்கூடம், பாதை வசதி அமைத்து தர வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.