districts

img

கள்ளக்குறிச்சி அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் தங்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை மற்றும் ஊதியத்தை வழங்க வேண்டும் என காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்போது கனியமூரில் உள்ள தனியார் பள்ளியில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1,500 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாத ஊதியமும், 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான நடைமுறை கால ஊதியமும், நிலுவை ஊதியமும் வழங்கப்படவில்லை.

இதனை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து உயர்கல்வித் துறையையும், தமிழக அரசையும் இவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமையன்று முதல் உள்ளிருப்பு  போராட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துத்துறை கவுரவ விரிவுரையாளர்களும் கலந்துகொண்டனர்.

உயர் கல்வித்துறை நிர்வாகமும், தமிழக அரசும், எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு விரைந்து இவர்களின் கோரிக்கையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

 

;