கடலூர் மார்ச் 25- காலிப்பணியிடங்களை நிரப்பப் கோரி தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தினர் கடலூரில் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு புதிதாக அறிவித்த 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான 187 ஆய்வக நுட்பனர் நிலை 2 பணியிடங்களை காலமுறை பணியிடங்களாக மாற்றி மருத்துவ தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும். அரசாணை 417-இன் படி ஆய்வக நுட்பனர் கவுன்சிலை நடைமுறைப்படுத்த வேண்டும், 12 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள தலைமை ஆய்வக நுட்பனர் பதவியை உருவாக்க வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியில் சேர்க்கப்பட்ட அனைத்து ஆய்வக நுட்பனர்களையும் பழைய ஓய்வூதியத்தில் இணைக்க வேண்டும். ஒரே ஒரு ஆய்வக நுட்பனர் மட்டுமே பணிபுரியும் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் மருத்துவமனைகளில் கூடுதலாக ஆய்வக நுட்பனர் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கேரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ஸ்ரீகாந்த் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் என்.பாண்டியன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் டி.ரவிச்சந்திரன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் என். காசிநாதன், சாலை பணி யாளர் சங்க மாவட்டச் செயலாளர் என்.ராமர், மருத்துவ நிர்வாக ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாஸ்கர் உள்ளிட் டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.