districts

img

சாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் நிறைவேற்ற கோரி- ததீஒமு சிறப்பு மாநாடு

சாதி ஆணவ படுகொலைகளைத் தக்க சிறப்பு சட்டம் நிறைவேற்ற கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மேற்கு மண்டல சிறப்பு மாநாடு பெருந்துறையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில துணை பொது செயலாளர் யு.கே.சிவஞானம் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் ச.நந்தகோபால் வரவேற்றார். மாநில பொது செயலாளர் கே.சாமுவேல் ராஜ் தொடக்கவுரையாற்றினார்.

அப்போது,அவர் பேசுகையில்,

எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் சாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் வேண்டும் என வலியுறுத்த கூடியிருக்கிறோம். கடந்த ஆண்டு இதே கோரிக்கைக்காக 13 நாட்கள் சுட்டெரிக்கும் வெயிலில் ஒரே கோரிக்கைக்காக நடந்து சென்றோம். நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளை வழங்கினாலும், போராட்டங்கள் இடைவிடாது நடத்தினாலும் சாதி ஆணவ படுகொலைகள் நடந்து கொண்டுதானுள்ளது. முன்னாள் கவுரவ படுகொலை எனப்பட்டது இன்று சாதி ஆணவ படுகொலை என நாம் கூறினோம். கோகுல்ராஜின் தாயார் போன்ற ஆணவ படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் நமக்கு எரிபொருளைப் போல நம் போன்ற செயல்பாட்டாளர்களை இயக்கிக் கொண்டுள்ளது. இந்த ஒற்றை பிறவில் வாழ்க்கையில் சிறகடிக்கும் இளைஞர்களை சாதி நிழல் போல் துரத்துகிறது. சாதி ஏற்பாடுகள் எவ்வளவு கொடூரமானவை என்பது தமிழக கிராமத்தைப் போல உலகில் வேறு எங்கும் உதாரணங்கள் இல்லை. செல்ல குழந்தைகள் தாய், தந்தையர்களாலேயே வெட்டி படுகொலை செய்யப்படுகின்றனர். அதற்கு காரணம். சாதியால் தள்ளி வைக்கப்படுவோம். நல்லது கெட்டதற்கு வரமாட்டார்கள் என்று ஆணவ கொலை செய்கின்றனர். என்ன நடந்து கொண்டிருக்கிறது தமிழகத்தில். இதனை தடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. ஆனால் பல அரசியல் கட்சிகள் சாதியின் பெயரால் வாக்குகளை பெறுகிறார்கள். தேர்தல் வாக்குறுதியின்படி நாம் வலியுறுத்தும் சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜை தவிர மற்றவர்கள் அனைவரும் மீதும் வேறு எந்த ஒரு வழக்கும் இல்லை. அப்பாவி இளைஞர்கள் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. அவர்களை ராமதாஸ், யுவராஜ் போன்றவர்கள் சாதி வெறியர்களாகவும், வன்முறையாளர்களாகவும் மாற்றுகின்றனர். எனவே இந்த இளைஞர்கள் ஆர்எஸ்எஸ் மத வெறியர்களிடம் செல்லாமல் தடுக்க வேண்டும். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற இளைஞர் அமைப்புகளில் சேர்க்க வேண்டும்.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் வாழ்ந்த மண் இது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரும், வைகுண்டரும், பெரியாரும் வாழ்ந்த சமுக சீர்திருத்த மண் இது. இதனால் அம்பேத்கார் சொன்னார் வடக்கே இந்தியா நிலப்பரப்பில் விசாலமாக உள்ளது. ஆனால் தமிழகம் நிலப்பரப்பில் குறுகியது. ஆனால் பகுத்தறிவில் விசாலமானது  என்றார்.

இது நமக்கும் அரசுக்குமான போராட்டமல்ல. வள்ளுவர் காலத்திலிருந்து மிகுந்த ஜனநாயகமிக்க, சமூக சீர்திருத்த, கலாச்சாரம் கொண்ட நாட்டில் முற்போக்கு இயக்கங்களுக்கும், ஆர்எஸ்எஸ் போன்ற பிற்போக்கு மத, சாதிவெறி சக்திகளுக்குமான போராட்டம். இதில் நாம் வென்றால் தமிழகம் முற்போக்காக விளங்கும் என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில், விசிக பவானி தொகுதி செயலாளர் இரா.ஆற்றலரசு, ஆதித்தமிழர் பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் மா.ஆறுமுகம், தமிழ்புலிகள் மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன், கே.ரவி, ஏ.விஸ்வநாதன், இரா.கோபால், என்.சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தனர். ததீஒமு மாவட்ட துணை தலைவர் பா.லலிதா வாழ்த்தி பேசினார்.

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் கௌரவிக்கப்பட்டனர். அமைப்பின் தலையீடுகளை விளக்கி மாநில துணை தலைவர் பி.பி.பழனிசாமி பேசினார். மாநில தலைவர் டி.செல்லக்கண்ணு கருத்துரையாற்றினார்.

நிறைவாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்ட ததீஒமு நிர்வாகிகள் மற்றும்  ஏராளமானோர் கலந்து கொண்டனர். தருமபுரி மாவட்ட செயலாளர் டி.மாதையன் நன்றி கூறினார்.

;