அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்தில் காயமடைந்து, மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவன் சபரீஷின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக அளித்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே தனது உறவினர் ஒருவருடன் கடந்த மே 14ஆம் தேதி பிற்பகல் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது, தனியார் பேருந்து மோதியதில் சிறுவன் சபரீஷ்(11) படுகாயமடைந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலும், பிறகு மதுரை வேலம்மாள் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தலைக்காய பிரிவில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை மருத்துவர்களால் மூளைச்சாவடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், சபரீஷின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்த நிலையில், அதற்காக அவரது தந்தை சரவணன் அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
இதனையடுத்து கல்லீரல் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரிக்கும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மற்றும் அப்பல்லோர் மருத்துவமனைக்கு சிறுநீரகங்களும், கருவிழிகளும் தானமாக வழங்கப்பட்டன. சபரீஷின் உடல், உறுப்பு தானத்தால் 4 பேர் பயன் பெற்றுள்ளனர்.