districts

நீலகிரி மாவட்டத்தில் 4 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: தில்லி திரும்பினார் குடியரசுத் தலைவர் முர்மு

உதகை, டிச.1-  நீலகிரி மாவட்டத்தில் 4 நாட்கள் சுற்றுப்​பயணம் முடிந்ததையடுத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தில்லி திரும்பினார். 

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்​பயண மாக கடந்த 27-ம் தேதி நீலகிரி மாவட்டம் வந்தார். உதகை ராஜ்பவனில் தங்கியிருந்த அவர், கடந்த 28-ம் தேதி முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். மேலும், போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்​களுக்கான நினைவுத்​தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். போரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விருது வழங்கி கவுர​வித்தார். 

இந்நிலையில், 4 நாட்கள் சுற்றுப்​பயணம் முடிந்து குடியரசுத் தலைவர், சனிக்கிழமை காலை உதகை ராஜ்பவன் மாளிகையில் இருந்து கார் மூலம் கோத்தகிரி, மேட்டுப்பாளையம், அன்னூர் வழியாக கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் தில்லி திரும்பினார்.