districts

திருச்சி முக்கிய செய்திகள்

பறவைகள் பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க கோரிக்கை: மாவட்ட ஆட்சியரிடம் வி. தொ.ச மனு

திருச்சிராப்பள்ளி, மார்ச் 3 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும்   கூட்டரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்டத் தலைவர் தங்கதுரை, மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி அய்யாளம்மன் படித்துறை அருகில் பறவைகள் பூங்கா செயல்பட்டு வருகிறது. இப்பூங்கா நடுத்தர மற்றும் வசதி படைத்த மக்களிடையே மிகவும் வரவேற்பு பெற்றுள்ளது. பூங்காவிற்கு நுழைவு கட்டணம் பெரியோர்களுக்கு ரு.200, சிறியவர்களுக்கு ரூ.150 வசூல் செய்யப்படுகிறது.  ஏழை எளிய மக்கள் தங்கள் குடும்பத்துடன் பறவைகள் பூங்காவிற்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. அனைத்து மக்களும் கண்டு ரசிக்கும் வகையில் அரசு நுழைவு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஏழை எளிய மக்கள் குடும்பத்துடன் பறவைகள் பூங்காவை கண்டு களிக்கும் வகையில் பெரியோர்களுக்கு ரூ.50, சிறுவர்களுக்கு அனுமதி இலவசம் என்ற வகையில் கட்டணத்தை மாற்றி நடைமுறைப்படுத்த அரசை வலியுறுத்துமாறு ஏழை, எளிய மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.  குடிநீர், சாலை வசதி செய்துதருக இதேபோன்று அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க அந்தநல்லூர் ஒன்றிய பொருளாளர் செந்தில்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் நடராஜன், சிபிஎம் கிளைச் செயலாளர் பரிமளம், அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில் கூறியதாவது:  திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் கொடியாலம் ஊராட்சி, சப்பானி கோவில் தெருவில் பட்டியலின மக்கள் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் எவ்வித அடிப்படை வசதியிமின்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் குடிநீர் குழாய் உள்ளது. ஆனால் வருடத்திற்கு ஆறு மாதம் கூட குடிநீர் வருவது கிடையாது. இதனால் இப்போது மக்கள் பல மாதங்கள் குடிநீருக்காக அடுத்த பகுதியில் சென்று குடிநீர் பிடிக்கும் நிலை உள்ளது. மேலும் சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் மக்கள் நடந்து செல்ல முடியாத வகையில் சேறும் சகதியுமாக சாலைஉள்ளது. எனவே சாலை வசதி செய்து தர வேண்டுகிறோம். இந்தப் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலில் படித்துறை கிடையாது. வாய்க்காலில் தண்ணீர் அதிகம் வந்தால் இப்பகுதி மக்கள் குளிக்க மிகவும் சிரமம் அடைகின்றனர். ஆதலால், இப்பகுதி மக்கள் மட்டும் இன்றி மற்றவர்கள் பயன்படும் வகையில் மேற்படி வாய்க்கால் கரையில் படித்துறை அமைத்து தர வேண்டும். மேலும் மயான எரிமேடை, காத்திருப்பர் கூடம் அமைத்துத்தரக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை அமைக்கவில்லை. மழைக்காலங்களில் யாராவது இறந்து விட்டால் கொட்டும் மழையில் உடலை எரியூட்டும் நிலை உள்ளது. எனவே, பட்டியல் இன மக்களுக்கு மயான எரிமேடை, காத்திருப்போர் கூடம், மயான சாலை செய்திட வேண்டுகிறோம் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இருசக்கர வாகன சாகசம் செய்தவர் கைது

திருச்சிராப்பள்ளி, மார்ச் 3-  திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சமயபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் ஆபத்தான முறையில் சாகசம் செய்த காணொலி. சமூக வலை தளங்களில் பரவியது.  இதுகுறித்த புகாரின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். செல்வ நாகரத்தினம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், சமயபுரம் காவல்றையினர் வழக்குப் பதிந்து. திருச்சி எடமலைப்பட்டி புதூர், துரைசிங்கம் நகர் ப. பாலகிருஷ்ணன்(28) என்பவரை கைது செய்தனர். அவரது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான வாலிபர் கட்டட தொழிலாளி என்பதும், இதுபோன்ற சாகசங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. பின்னர் அவருக்கு அறிவுரை கூறி ஜாமினில் விடுவித்தனர்.

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை, மார்ச் 3-  புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை காலை 8 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளதாவது: இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்குத் தேர்ந்தெடுக்க உள்ளனர். அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கிக் கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து, பிரத்தியேக அரங்கம் அமைத்து ஆலோசனை அளிக்கப்பட உள்ளது. எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளோமா, பி.இ மற்றும் நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், www.tnprivatejobs.tn.gov.in வாயிலாக இவ்வேலைவாய்ப்பு முகாமிற்கு முன்பதிவு செய்தும் பயன்பெறலாம்.

கஞ்சா வைத்திருந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது 

தஞ்சாவூர், மார்ச்.3 -   தஞ்சை அருகே வல்லத்தில்  விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஜன. 26 ஆம் தேதி வல்லம் பிரிவு சாலை  பகுதியில்  கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அருண் (28) என்பவரை  கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம்  பரிந்துரையின் பேரில், தஞ்சாவூர்  மாவட்ட ஆட்சியர்  பிரியங்கா பங்கஜம்  உத்தரவின்படி அருணை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

மின்சாரம் தாக்கி  இளைஞர் உயிரிழப்பு

தென்காசி, மார்ச் 3 - தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட உமையதலைவன் பட்டியைச் சேர்ந்த சந்தனமாரி (28), தாயுடன் உமையதலைவன் பட்டியில் வசித்து வந்தார். ஞாயிறன்று சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் பிடிப்பதற்காக, அருகிலுள்ள மின்சார போடின் சுவிட்ச்சை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. அக்கம்பக்கத்தினர் சந்தனமாரியை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சந்தனமாரி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து திருவேங்கடம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவில்  இருந்து திருச்சி வந்த பயணி கைது

திருச்சிராப்பள்ளி, மார்ச் 3-  திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணிகளை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர். அப்போது அவர் போலியான பிறந்த தேதி மற்றும் முகவரியை கொடுத்து மோசடி செய்து பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரி அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்தபோது, நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த பழனியப்பன்(54) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இமிகிரேசன் அதிகாரி ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பழனியப்பனை கைது செய்தனர்.

ஊழியர்கள் காலிப்பணியிடத்தை நிரப்பிய பின்  என்ட் டூ என்ட் திட்டத்தை அமலாக்குக! டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தல்

மயிலாடுதுறை, மார்ச் 3-  மயிலாடுதுறை சிஐடியு அலுவலகத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகக்குழு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ப. ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் எண்ட் டு எண்ட் திட்டத்தை அமலாக்கப் போவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்ததையொட்டி, நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறையாலும், வேலைப் பளுவாலும் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.  ஏற்கனவே கடைகளுக்கான ஊழியர்கள் பற்றாக்குறையால் பாட்டில்கள் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்து காலி பாட்டில்கள் வாங்கி பராமரிப்பது, பராமரிக்கப்படும் பாட்டில்கள் வைக்கும் இடத்திற்கு வாடகை அளிக்காமல் அந்தந்த கடைகளே பார்த்து கொள்ளவேண்டும் போன்ற நெருக்கடியில் பணிசெய்து வரும் சூழலில், தற்போது ஸ்கேனிங் முறையை நிர்வாகம் அறிவித்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையை போக்கி மேற்கண்ட திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி உள்துறை செயலாளர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு), டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர், முதுநிலை மண்டல மேலாளர், மாவட்ட மேலாளர் மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆட்சியர், தலைவர்கள் உள்ளிட்டோருக்கு தபால் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எண்ட் டூ எண்ட் திட்டத்தை அமலாக்குவதற்கு முன்பு ஊழியர்கள் பற்றாக்குறையை நிரப்புதல், பல்வேறு காரணங்களுக்காக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை பணியமர்த்துதல் போன்ற கோரிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் அமலாக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றாமல் காலதாமதம் நீடித்தால் தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாக மெத்தன நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, டாஸ்மாக் கடையடைப்பு போராட்டம் விரைவில் நடத்தப்படும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் ப.மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.