திருவாரூர், மார்ச் 3- திருவாரூர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள 536 தமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் சுமார் ஒரு லட்சத்து 26 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் இயக்கம் நடைபெறாமல் தேங்கியுள்ளது. நெல் மூட்டைகள் இருப்பு வைக்காமல் உடனடியாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தைப் பொருத்தவரை, இந்த ஆண்டு நேரடி கொள்முதல் நிலையங்கள் 536 திறக்கப்பட்டுள்ளது. இது, வரவேற்கத்தக்க நிகழ்வாக இருந்தாலும் 536 நிலையங்களில் சொந்த கட்டிடம் என பார்த்தால் 185 மட்டும் உள்ளது. பாக்கி 351 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தவெளியில் வாடகை ஒப்பந்தத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் நிலையம் மூலமாக 4, 0800,000, மெட்ரிக் டன் நெல் கொள்முதல் இதுவரை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்துள்ள ஒரு லட்சத்து 26 மெட்ரிக் டன் நெல்மணிகள் 3,10,000 மூட்டைகளாக நேரடி கொள்முதல் நிலையங்களில் இயக்க நடைவடிக்கை இல்லாமல் தேங்கியுள்ளது. நெல் அறுவடை நேரத்தில் பருவ மாற்றத்தினால் பெய்த மழை காரணமாக நெல்மணிகள் நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மழை நீர் வடிந்த பின் சாய்ந்த தலை சாய்ந்து கிடந்த நெற்பயிர்களை தூக்கி நிறுத்தி கட்டி பாதுகாத்து இயற்கை இடர்பாடுகளை கடந்து அறுவடை செய்துள்ள நிலையில், ஒரு ஏக்கருக்கு 20-மூட்டை என குறைந்த மகசூல் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது. கடந்த இரண்டு மூன்று தினங்களாக விட்டுவிட்டு பெய்த மழையில் கூட விவசாயிகள் கடும் முயற்சியில் அறுவடை செய்து நெல்மணிகளை அரசின் நேரடி கொள்முதல் நிலையம் கொண்டு குவித்து வைக்கும் நிலை உள்ளது. ஆகவே அரசு துரிதமாக செயல்பட்டு விவசாயிகள் கொண்டுவரும் நெல் நெல்மணிகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். நேரடி கொள்முதல் நிலையத்தில் இருப்பு வைக்காமல் உடனுக்குடன் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளின் இக்கோரிக்கைகளை உடனடியாக அரசு மேற்கொண்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.