districts

img

பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாவட்டங்களில் ஆட்சியர்கள் ஆய்வு

திருவாரூர், மார்ச் 3-  திருவாரூர் வட்டம் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டார்.  திருவாரூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3 ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 5986 மாணவர்களும், 7420 மாணவிகளும் என மொத்தம் 13406 மாணவ, மாணவிகள், 57 தேர்வு மையங்களில் எழுத விண்ணப்பித்ததில் 5766 மாணவர்களும், 7291 மாணவிகளும் என மொத்தம் 13057 பேர் தேர்வு எழுதினர். இதில் 137 பேர் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர். தேர்வு கண்காணிப்பு பணியில் 75 நிலையான கண்காணிப்பு குழுக்களும், 5 பறக்கும் படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேர்வுகளில் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் சௌந்தர்ராஜன், வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.  புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 20,351 மாணவர்கள் எழுதினர். புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தைப் பார்வையிட்ட பிறகு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்ததாவது: 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் 9,688 மாணவர்களும், 11,106 மாணவிகளும் என 20,794 மாணாக்கர்களும் மற்றும் தனித்தேர்வர்களாக 82 மாணாக்கர்களும் என மொத்தம் 20,876 மாணாக்கர்கள் தேர்வு எழுதிட நுழைவுச் சீட்டு பெற்றிருந்தார்கள். இதில் 9,392 மாணவர்களும், 10,891 மாணவிகளும் மற்றும் தனித்தேர்வர்களாக 68 மாணாக்கர்களும் என மொத்தம் 20,351 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். 296 மாணவர்களும், 215 மாணவிகளும், 14 தனித்தேர்வர்களும் என மொத்தம் 525 மாணாக்கர்கள் வருகை புரியவில்லை. இத்தேர்வுகளை நடத்திட பறக்கும்படை மற்றும் நிலையான உறுப்பினர்களைக் கொண்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 5 வினாத்தாள் கட்டுகாப்பு மையங்களும், 26 வினாத்தாள், விடைத்தாள் கொண்டு செல்லும் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.  கரூர்: 9751 பேர் கரூர் மாநகராட்சி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற தமிழ் முதல் பாட +2 பொது தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்கு பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: கரூர் மாவட்டத்தில் +2-ம் வகுப்பு தமிழ் முதல் ஹிந்தி,பிரஞ்ச் மற்றும் அரபிக் ஆகிய பாடத்தேர்வுகள் 45 தேர்வு மையங்களில் நடை பெறுகிறது. இந்த தேர்வை 4774 மாணவர்களும், 5491 மாணவிகளும் என மொத்தம் 10265 மாணாக்கர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், 9751 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர்.  அனைத்து தேர்வு மையங்களிலும் மாணாக்கர்கள் அச்சமின்றி தேர்வு எழுதத் துப்பாக்கி ஏந்தி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், தீயணைப்பு துறையினர் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையின் மூலம் மாணாக்கர்கள் தேர்வு எழுத மையங்களுக்கு வந்து செல்ல தேவையான அளவு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடுகள் ஏதுவும் நடைபெறாமல் இருக்கவும், நேர்மையான முறையில், பள்ளி கல்வி சார்பில் 112 நிலையான படை மற்றும் பறக்கும் படைகள் நியமணம் செய்யப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்..      ஆய்வின்போது, முதன்மை கல்வி அலுவலர் கூ.சண்முகம், வட்டாட்சியர் மு.செந்தில்நாயகி, மண்டல துணை வட்டாட்சியர் ஆ.லட்சுமணன், பள்ளித்துணை ஆய்வாளர் குருமாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்..