நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்ட மனைகள் ஆய்வு
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்ட மனைகளுக்கு இதுவரை கிரையப் பத்திரம் பெறாமல் உள்ள 12,495 மனைகளுக்கு ஒவ்வொரு மனையாக ஆய்வு செய்ய 50 சமுதாய பங்கேற்பு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் அன்சுல் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் திங்களன்று (மார்ச் 3) விடுபட்ட மனைகளுக்கு கிரையப்பத்திரம் வழங்குவது தொடர்பாக வாரிய மேலாண்மை இயக்குநர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து வாரிய மேலாண்மை இயக்குநர் கூறுகையில், வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டம் ( MUDP) மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் ( TNUDP) ஆகிய இரு திட்டப்பகுதிகளில் ஒதுக்கீடு பெற்று கிரையப் பத்திரம் பெற்ற மனைகள் தவிர்த்து இதுநாள் வரை கிரையப்பத்திரம் பெறாமல், மனைக்குண்டான தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்காமல், நிலுவையில் உள்ள 12495 மனைகளை சமுதாய பங்கேற்பு உதவியாளர்களை (CPA) கொண்டு ஒவ்வொரு மனையாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மனைக்குண்டான ஆவணைங்களை பெற்று அதன் விவரத்தை வாரியத்திற்கு 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டம் 1 முதல் கோட்டம் 7 வரை உள்ள 322 திட்டப்பகுதிகளில் அமைந்துள்ள 12,495 மனைகளை ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 25 மனைகள் வீதம் 10 நாட்களுக்கு 250 மனைகள் ஆய்வு செய்ய 50 சமுதாய பங்கேற்பு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொறுப்பு அலுவலர்களாக ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பாளர் நிலையிலும் மற்றும் இளநிலை உதவியாளர் நிலையிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மேற்கண்ட அனைத்து பணிகளின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு கள பணியாளர்கள் ஆய்வு செய்தததை செயற்பொறியாளர், உதவி நிர்வாகப் பொறியாளர், எஸ்டேட் அலுவலர், சமுதாய அலுவலர் மற்றும் சமுதாய வளர்ச்சி அலுவலர் ஆகிய அனைவரும் 20 விழுக்காடு மறு ஆய்வு செய்து தினசரி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வாரிய அலுவலர்கள் மற்றும் பணியார்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் வாரிய செயலாளர் நா.காளிதாஸ், தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் நிர்மல்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.