தொழிற்சாலை கட்டும் பணி ஆய்வு
பெரம்பலூர், நவ.29 - பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடலூர் அருகே திருவிளக்குறிச்சியில் ரூ.150 கோடியில் 60 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டு மான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதன் முன்னேற்ற நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். இதில், பால் உற்பத்தி பரா மரிப்பு துணை பொது மேலாளர் (பொ) திவான் ஒளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய ஊரக காவல் நிலையம் திறப்பு
பெரம்பலூர், நவ.29 - பெரம்பலூர் நகர காவல் நிலையம் செயல்பட்டு வரும் நிலை யில் நிர்வாக காரணங் கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கையாள்வதற்கு ஏதுவாக பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்குட்பட்ட சுமார் 33 கிராமங்களை உள்ளடக்கி பெரம்ப லூர் வட்டம், செஞ்சேரி கிராமத்தில் பெரம்ப லூர் ஊரக காவல் நிலை யத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா புதன் கிழமை திறந்து வைத்தார். விழாவில் காவல் துறை ஏடிஎஸ்பி மதியழ கன், டிஎஸ்பி ஆரோகி ராஜ், ஆய்வாளர் சதீஷ் குமார் எஸ்பி தனிப்பிரிவு ஆய்வாளர் வெங்க டேஷ்வரன், எஸ்ஐ கண்ணுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்
புதுக்கோட்டை, நவ.29 - புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறைகளில் பணி யாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் ஓய்வூதியப் பலன்கள் தொடர்பான குறை தீர்க்கும் கூட்டம் (6.12.2024) வெள்ளிக் கிழமை காலை 10.30 மணி யளவில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் மு.அருணா மற்றும் சென்னை ஓய்வூதிய இயக்குநர் முன்னிலை யில் இக்கூட்டம் நடை பெறவுள்ளது. மனுதாரர் பெயர் மற்றும் முகவரி, ஓய்வூதிய ஆணை எண் (PPO NO.), ஓய்வு பெற்ற அரசு அலுவலர் பெயர், ஓய்வுபெற்ற அரசு அலு வலர் கடைசியாக பணி புரிந்த பதவி மற்றும் அலு வலகம், அரசு அலுவலர் ஓய்வு பெற்ற தேதி, இறந்த தேதி, தீர்வு செய்ய வேண்டிய கோரிக்கையின் விபரம், இதற்கு முன் மனு செய்திருந்தால் அதன் விபரம், எந்த அரசு அலு வலரால் கோரிக்கை தீர்வு செய்யப்பட வேண்டும் என்ற விப ரங்களுடன் வர வேண்டு மென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
பெரம்பலூர், நவ.29 - பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ச.ராஜேந்திரன் (58). இவர் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகள் பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியர் இத்தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் செவ்வாயன்று முதன்மை கல்வி அலுவலர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், சம்பவம் குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் ஆசிரியர் ராஜேந்திரனை, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மக்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் சிபிஎம் கவுன்சிலர் சுரேஷ் வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, நவ.29 - திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் வெள்ளியன்று நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசுகையில், “திருச்சி மாநகராட்சியில் 18,498 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பகுதியில் சுற்றித் திரிந்த மாடு களை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்ததில் ரூ.17.68 லட்சம் வசூல் செய்யப் பட்டுள்ளது. 2.22 லட்சத்திற்கு மாடுகள் ஏலம் விடப்பட்டுள்ளன” என்றார். கவுன்சிலர்கள் பேசியதாவது: சுரேஷ் (சிபிஎம்) - நமக்கு நாமே திட்டத்தில்கூட மகா லெட்சுமி நகரில் பாதாளச் சாக்கடை பணிகள் தொடங்கப்படவில்லை. மக்கள் மீதான வரியை குறைக்க வேண்டும். பிச்சைநகர் - துரைசாமி புரம் இடையே பாலம் அருகே குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். இதற்கு மேயர் அன்பழகன், “குப்பை கழிவு களில் இருந்து பயோ கேஸ் மைனிங் திட்டம் தொடங்கப்படவுள்ளது. அதுபோல கட்டிட கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டமும் நடை முறைப்படுத்தப்படும்” என்றார். முத்துசெல்வம் (திமுக) - எனது வார்டில் இளநிலை பொறியாளர் காலி பணியிடத்தை நிரப்ப வேண்டும். சுரேஷ் (இ.கம்யூ) - நாய்களின் எண்ணிக் கையை கட்டுப்படுத்த வேண்டும். துப்புரவு பணி யாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். பணிக் காலத்தில் உயிரி ழந்த துப்புரவு பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். அதற்கு தடையாக உள்ள தனியார் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ள துப்புரவு பணிக்கான ஒப்பந் தத்தை ரத்து செய்ய வேண்டும். சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரிகளின் 6 சதவீத உயர்வை ரத்து செய்ய வேண்டும். வரி உயர்வு செய்ய வேண்டும் என்ற ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணியக் கூடாது. அம்பிகாபதி (அதிமுக) - புதிதாக போடப் பட்ட சாலைகள் சேதமடையாமல் இருக்க, போது மான மழைநீர் வடிகால் பாதையை ஏற்படுத்தி தர வேண்டும். சேறும் சகதியுமாக உள்ள காந்தி மார்க்கெட் பகுதியில் சைக்கிள் நிறுத்தத்தை சீர்செய்ய வேண்டும். ரெக்ஸ் (காங்): எனது வார்டில் நீண்ட கால மாக கோரிக்கை வைத்த சேரன் நகரில் சாலை போட நடவடிக்கை எடுத்ததற்கு மாநக ராட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாலாஜி நகர் 5 ஆவது தெருவில் திரியும் மாடு களை பிடிக்க வேண்டும் என்றனர்.
தினசரி காய்கறி சந்தை வியாபாரிகளுக்கு அடிப்படை வசதி செய்து தர உறுதி பெரம்பலூர், நவ.29-
பெரம்பலூர், நவ.29- பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தினசரி காய்கறி சந்தை (மார்க்கெட்)க்கு புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக காய்கறி மார்க்கெட்டை வடக்கு மாதவி சாலையில் உள்ள உழவர் சந்தை அருகே நகராட்சி சார்பில் மாற்றி இடம் வழங்கப்பட்டது. ஆனால் மார்க்கெட்டிற்கான அடிப்படை வசதியான ஷெட் மற்றும் மின் இணைப்பு வழங்காமல் இருந்தது. இந்நிலையில் சிஐடியு சார்பில் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக, மாற்று இடத்தில் மின்சார வசதி, பாதை வசதி, ஷெட் வசதி ஆகிய வற்றை அமைத்து கொடுக்க வேண்டும் என வலியு றுத்தியும், புதிய கட்டிடத்தில் ஏற்கனவே கடை நடத்திய வர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் ராமர், நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாநிலக் குழு உறுப்பினர் என். செல்லத்துரை ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர், “புதிதாக தினசரி காய்கறி சந்தை அமைய இருக்கும் இடத்தில் வியாபாரிகளுக்கான அனைத்து அடிப்படை வசதியும் செய்து தரப்படும்’ என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம்
பொன்னமராவதி, நவ.29 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டத்திற்கு பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வெங்கடேசன், செயல் அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அம்ருத் 2.0 திட்டத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைத்தல், புதிதாக தார்ச்சாலை, வடிகால் மற்றும் பேவர் ப்ளாக் சாலை அமைக்கும் பணி, வரவு-செலவு மற்றும் பிறப்பு, இறப்பு பதிவு செய்யப்பட்டது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பள்ளியில் மரக்கன்றுகள் நடல்
பாபநாசம், நவ.29 - சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கென தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் பயன்தரக் கூடிய கொய்யா, நெல்லி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் பாபநாசம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) முருகன், பள்ளித் தலைமை யாசிரியர் ரமேஷ், ஆசிரியை அமுதா, பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர் உஷா, நினைவில் வாழும் மன்னார்குடி கோட்டு வாத்தி யம் சாவித்திரி அம்மாள் சமூக நல அறக்கட்டளை பிரசன்னா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, நவ.28- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், செவ்வாயன்று திருச்சி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகில் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சிராஜுதீன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநில செயலாளர் செந்தமிழ் செல்வன், மாவட்டத் துணைத் தலைவர் சின்னசாமி, மாவட்ட இணைச் செயலாளர் முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் சந்தன மூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி, சங்க மாவட்டப் பொருளாளர் துளசிராமன் ஆகியோர் பேசினர்.
அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக் கோரிக்கை
தஞ்சாவூர், நவ.29 - அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், அழகியநாயகிபுரம் ஊராட்சி, கரிசவயல் ‘உதவும் கரங்கள் அறக்கட்டளை’ சார்பில், அதன் நிர்வாகிகள் இப்றாஹீம், தமீம் அன்சாரி, சதக்கத்துல்லாஹ் ஆகியோர், தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளனர். அம்மனுவில், “அழகியநாயகிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான ஆண்டிக்காடு, பள்ளத்தூர், இரண்டாம்புலிக்காடு, மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பூங்குடிக்காடு, கரம்பக்காடு, செருபாலக்காடு, தில்லாங்காடு, நாடியம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சிகிச்சைக்காக அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இப்பகுதியையொட்டி கிழக்கு கடற்கரை சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகமான விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. அதனால் அவர்களை மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அல்லது பேராவூரணி கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அதிக தூரம் செல்ல வேண்டியிருப்பதால் சிகிச்சை தாமதமாகி உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே இதனை கவனத்தில் கொண்டு அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை அவசர சிகிச்சை பிரிவுடன், மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும். போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமனம் செய்யவும், மருத்துவ உபகரணங்கள், அவசர சிகிச்சை மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பகுதிக்கு தனியாக 108 ஆம்புலன்ஸ் அவசர ஊர்தி வாகனத்தை பெற்றுத் தர வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழைய கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு, தேவையான நவீன வசதிகளுடன் கூடுதல் புதிய கட்டிடங்களை அமைத்து தர வேண்டும். இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டையும் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள அவர்களுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.