விவசாயிகள் புகார் தஞ்சாவூர், டிச.25 - மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அடங்கல் தர மறுப்பதாக தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் எழுந்தது. கோட்டாட்சியர் செ.இலக்கியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கருத்துகள்: அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோரும் விவசாயிகளுக்காக விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், குடும்ப அட்டை, கணினி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் சான்று, ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவை இணைக்க வேண்டும் என வேளாண் துறையினர் கூறுகின்றனர். ஆனால், வயல்களில் தண்ணீர் வடிந்துவிட்டது எனக் கூறி கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கல் தர மறுக்கின்றனர். கோட்டாட்சியர்: அடங்கல் வழங்குமாறு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படும். தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: வேளாண் பொறியியல் துறை மூலம் வாடகைக்கு வழங்கப்படும் டிராக்டர்களுக்கு டீசல் இல்லாததால் இயக்க முடியாமல் கிடக்கிறது. இதனால், நிலக்கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர் சாகுபடிகளைத் தொடங்க முடியவில்லை. எனவே, டீசல் ஏற்பாடு செய்து தர வேண்டும். கூத்தூர் கே.எம்.ரெங்கராஜன்: நடுப்படுகையில் காட்டுப் பன்றிகளால் அறுவடைக்கு தயார் நிலையிலுள்ள நெற் பயிர்கள் சேதமடைந்து வருகின்றன. கோட்டாட்சியர்: காட்டுப் பன்றிகளைத் தடுக்க ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் மருந்து வழங்கப்படுகிறது. ஆம்பலாப்பட்டு அ.தங்கவேல்: பாதிக்கப்பட்ட பயிர்களை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டைத் தடுக்க வேண்டும். ஓலத்தேவராயன்பேட்டை ஆர்.அறிவழகன்: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோருவதற்கான விண்ணப்பத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். கோனேரிராஜபுரம் கே.எஸ். வீரராஜேந்திரன்: மாவட்ட ஆட்சியரகத்தில் பயிர் காப்பீட்டுக்கு தனி அலுவலகம் அமைக்க வேண்டும். இதன் மூலம் பயிர் காப்பீட்டில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு எளிதாக இருக்கும். நாகாச்சி கோவிந்தராஜ்: பயிர் அறுவடை சோதனையை எங்கே, எப்போது நடத்தப்படுகிறது என்ற தகவல் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. ரகசியமாக நடத்தப்படும் இச்சோதனையில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகின்றன. எனவே, பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் தனியாரை அனுமதிக்காமல், அரசே ஏற்று நடத்த வேண்டும். வடக்கூர் எல்.பழனியப்பன்: திருமங்கலக்கோட்டையில் அக்டோபர் மாதம் பெய்த மழையால் 100 ஏக்கர் அளவுக்கு நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாளமர்கோட்டை வி.எஸ்.இளங்கோவன்: வடிகால்களைத் தூர் வாரி சீரமைத்திருந்தால், மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்காது. இனிமேலாவது நீர் நிலைகளைத் தூர்வாரி சரியாக பராமரிக்க வேண்டும். நீர் மேலாண்மையில் அரசு கவனம் செலுத்த வேண்டும். மணத்திடல் எஸ்.சிவகுமார்: மேட்டூர் அணை ஜன.28 ஆம் தேதியுடன் மூடப்படுவதால், அதுவரை முறை வைக்காமல் அனைத்துப் பகுதிகளுக்கும் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.