திருச்சிராப்பள்ளி, மார்ச் 3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலக்கரை பகுதிக்குழு சார்பில் திங்களன்று மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட செங்குளம் காலனியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும். மாலை நேரத்திலும் குடிநீர் வழங்க வேண்டும். குடிநீருடன் கழிவுநீர் கலப்பதை உடனடியாக சரி செய்ய வேண்டும். குடியிருப்பு பகுதியின் பின்புறத்தில் உள்ள குப்பைமேடுகளை அகற்ற வேண்டும். பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்ய வேண்டும். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். போதை ஆசாமிகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க காவல்துறை உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு செங்குளம் காலனி கிளைச் செயலாளர் சாந்தா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சிவக்குமார், சீனிவாசன், பகுதிச் செயலாளர், மாமன்ற உறுப்பினர் சுரேஷ், பகுதிக்குழு உறுப்பினர் கனல்கண்ணன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பொன்மகள் ஆகியோர் பேசினர். இதில் வனிதா, நிர்மலா, செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் மாநகராட்சி அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனு பெற்றுக் கொண்ட அதிகாரிகள் சாலை, மின்சாரம், குடிநீர் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.