districts

பட்டுக்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த மருமகளை அடித்து கொலை செய்த மாமியார் கைது

தஞ்சாவூர், ஜன.11-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் இடையக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அல்லாபிச்சை. இவருடைய மகள் ஷபீனா பர்வீன் (21) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முகமது ரபி என்பவருடைய இரண்டாவது மகன் ரியாஸ் முகமது இப்ராஹிம் என்பவருக்கும் கடந்த 13.10.2024 ஆம் ஆண்டு ஜமாத்தார்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.  ஷபீனா பர்வீனின் கணவர் ரியாஸ் முகமது இப்ராஹிம் வேலைக்காக துபாய்க்குச் சென்று விட்ட நிலையில், ஷபினா பர்வின், அவரது மாமியார் ரஹ்மத்து நிஷா(52) ஆகிய இருவரும் ஒன்றாக வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜன.6 ஆம்  தேதி ஷபீனா பர்வீன் பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டதாக மாமியார் ரஹமத் நிஷா, ஷபினா பர்வீன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த சபீனா பர்வீன் குடும்பத்தினர், வீட்டிற்கு சென்று, மயங்கி கிடந்த ஷபீனா பர்வீனை மீட்டு பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஷபீனா பர்வீன் இறந்து விட்டதாகக் கூறினர்.  இதை கேட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஷபீனா பர்வீன் தந்தை அல்லா பிச்சை, மதுக்கூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் இறந்த சபீனா பர்வீன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.  ஷபீனா பர்வீன் இறப்பு குறித்து பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில், மதுக்கூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோ மேற்பார்வையில் போலீசார் விசாரணை செய்தனர்.  இதில் ஷபீனா பர்வீன் மாமியார் ரஹ்மத்து நிஷாவிடம் விசாரணை செய்ததில், “தன் மகன் காதல் திருமணம் செய்தது எனக்கு பிடிக்கவில்லை. மருமகள் வீட்டில் வேலை செய்யாமல் இருந்ததால், இரண்டு பேருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், ஆத்திரத்தில் வீட்டில் தண்ணீர் ஊற்றி வைக்கும் பிளாஸ்க்கை எடுத்து அடித்ததில் மயங்கி விழுந்து இறந்து விட்டதாகவும்’’ தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, மாமியார் ரஹ்மத்து நிஷாவை காவல்துறையினர் கைது செய்தனர்.