districts

img

தனியார் ்துறை வேலைவாய்ப்பு முகாம்: 510 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

தஞ்சாவூர், ஜன.11-  தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, காஞ்சிபுரம், ஓசுர், திருப்பூர், கோவை, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த தனியார் நிறுவனங்களான எல்&டி நிறுவனம், ஸ்ரீராம் என்டர்பிரைசஸ், டி.வி.எஸ். டிரெயினிங் சர்விசஸ், ஆக்ஸிஸ் பாங்க், கேசான் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஆனைமலை டொயோடா மற்றும் குறிஞ்சி மெட்ரோ பஜார் போன்ற முன்னணி நிறுவனங்கள் உட்பட 151-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன.  முகாமில், 18 வயது முதல் 35 வயது வரை உள்ள 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ படித்த இளைஞர்கள். இளம் பெண்கள் என மொத்தம் 2,172-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.  முகாமில் 5 மாற்றுத்திறனாளிகள் உட்பட 510 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 355 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கும் 79 நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இம்முகாமில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் சிறப்புரையாற்றி பணி நியமன ஆணைகள் வழங்கினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் பெ.க.அருண்மொழி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் கா.பரமேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.