தஞ்சாவூர், ஜன.8 - தஞ்சாவூர் வனக்கோட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகம், பேராவூரணி அருகே உள்ள மனோராவில் கடல் பசு பாதுகாப்பு தொடர்பான, மீனவர்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு வனத்துறை, தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டம், கடல் பசு பாதுகாப்பகம் பாக் நீரிணை, ஓம்கார் பவுண்டேஷன், இந்திய வன உயிரின நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திர சேகரன் தலைமை வகித்தார். வனவிலங்கு நிறுவன ஆராய்ச்சியாளர் அருண் சங்கர், உதவியாளர் பிரவீன் ஆகியோர் உரையாற்றினர். இதில் சேதுபாவாசத்திரம் காவல்துறை உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் மற்றும்10 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், மீனவர்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கடல்பசுக்களை காப்போம் என உறுதிமொழி ஏற்றனர். கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் ஆராய்ச்சி உபகரணங்கள் குறித்த கண்காட்சி மாணவர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும், கடல் பசு தொடர்பான விழிப்புணர்வு வினாடி - வினா போட்டி யில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.