சென்னை, ஜன.9- சென்னையில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் உலகத்தரத்திலான ரோபோட்டிக் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. சிறுநீரகம், மகப்பேறு மருத்துவம், இரைப்பை குடல் மருத்துவம், பொதுவான அறுவை சிகிச்சை மற்றும் இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு துல்லியமான அறுவை சிகிச்சை மேற்கொள்ள எஸ்.எஸ்.ஐ மந்த்ரா 3 ரோபோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கேற்ப மருத்துவமனையின் வேளச்சேரி கிளை 100விழுக்காடு தொழில்நுட்பம் கொண்ட அறுவை சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் முதன்முறையாக அறிமுகமாகும் எஸ்எஸ்ஐ மந்த்ரா 3 ரோபோட், தொலைதூர அறுவை சிகிச்சை மற்றும் டெலிபிராக்டரிங் திறன்களை கொண்ட முன்னணி ரோபோட்டிக் அமைப்பாகும். குறைந்த கட்டணத்தில் துல்லியமான அறுவை சிகிச்சையை இதன் மூலம் அளிக்க முடியும் என்று துவக்க விழாவில் பேசிய பிரசாந்த் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர். பிரசாந்த் கிருஷ்ணா கூறினார். துல்லியமான மற்றும் செயல்திறன் மிக்க அறுவை சிகிச்சையால் நோயாளிகள் விரைவாக குணம் அடைய முடியும் என்றும் அவர் கூறினார். மந்த்ரா சர்ஜிகல் ரோபோட்டிக் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரோஹித் குப்தா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.