திருவாரூர், டிச.7- நலவாரிய மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமை வகித்தார். தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கட்டுமானம் மற்றும் முறைசாரா தொழிலாளர்களை அதிக எண்ணிக்கையில் வாரியத்தில் சேர்த்து, பதிவு செய்வது தொடர்பாகவும், நலவாரிய உறுப்பினர்களின் பதிவு, புதுப்பித்தல், திருமண உதவி, கல்விசலுகைகள், ஓய்வூதியம், இயற்கை மற்றும் விபத்து நிதிகள் விரைவாக கிடைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, 2025 ஜனவரி மாதம் முதல், நகராட்சி, ஒன்றியப் பகுதிகளில் பதிவு முகாம் நடத்திட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
கட்டுமான நல வாரியத்தில், ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர் இயங்கும் கட்டுமான தொழிலாளர்களுக்கான நடமாடும் மருத்துவமனை வாகனம் செயல்படாமல் உள்ளது. மாவட்டத்தில் கடைகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆணையின்படி, குறைந்தபட்ச தினக்கூலி கிடைக்க உறுதிப்படுத்தவும், அவர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ., உள்ளிட்ட சலுகைகள் கிடைத்திட தொழிலாளர் நல அலுவலர்கள் ஆய்வுகள் நடத்திட வேண்டும் என சிஐடியு சார்பாக கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் பேசும்போது, இதுதொடர்பாக பரிசீலிப்பதாகவும், நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடர்பாக, தினசரி நாளிதழ்களில் அறிக்கை மூலம் தொழிலாளர்களுக்கு தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், துணைச் செயலாளர் கே.கஜேந்திரன், ஏஐடியுசி மாவட்டப் பொருளாளர் கலை செல்வன், தொமுச மாவட்டத் தலைவர் மகாதேவன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர்.